===முனைவர். தி.ராஜ்பிரவீன்===
மும்பை பெரு நகரத்தில் பெருகி வரும் மக்கள் தொகை. தொழில் தேவைகள், நகரமயமாதல் காரணமாக பல லட்சம் மரங்கள், இயற்கை வளங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் அழிக்கப்படுவது கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கை நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சூழலில் மும்பை மாநகரில் உள்ள பசுமை ஆர்வலர்கள் இணைந்து புதிய மரங்கள், தோட்டங்கள், பூங்காக்களை காலி இடங்களில் அமைத்து அமைதியாக மண்ணின் வளம், இயற்கை வள பெருக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக லண்டன் மாநகரில் நகரமயமாதல் காரணமாக அழிக்கப்பட்ட பல இயற்கை வளங்களை மீட்கவும், சிறிய அளவிலான ‘கொரில்லா தோட்டக்கலை இயக்கம்” (Gverrilla Gardening movement) இயக்கம் துவங்கப்பட்டு சாதாரண மக்களை இணைந்து யாரும் பார்க்காத நேரத்தில் பயன்படாத அல்லது புறக்கணிக்கப்பட்ட இடங்களில் மரங்கள், தோட்டங்களை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதேபோல் மும்பையில் உள்ள பசுமை ஆர்வலர்கள் இணைந்து போராளி தோட்டக்காரர்களாக (Rebel gardeners) மாறி காலி இடங்களில் மரங்களை தோட்டங்களை அமைத்து வருகின்றனர்.

விதைப் பந்துகள் மூலம் காடுகள் வளர்ப்பு
பசுமை உலகை மீட்கும் நண்பர்கள் என்ற குழுவை உருவாக்கி செயல்படத் துவங்கியுள்ள பசுமை ஆர்வலர்கள் மும்பை நகரைச் சுற்றி உள்ள காட்டு பகுதிகளிலும் மரம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பழமையான ஜப்பானிய முறையான விதைப் பந்துகளை (seed balls) உருவாக்கி சிறிய ரக அளில்லா வான ஊர்திகளை கொண்டு மலைகள், மரங்கள் இல்லாத காடுகளில் விடுமுறை நாட்களில் வீசி வருகின்றனர்.தவிர இயற்கை ஆர்வலர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல பயிலரங்குகள் வாயிலாக, எவ்வாறு பழங்களை சாப்பிட்டபின் விதைகளை சேகரிக்க வேண்டும், அதனை கழிவுகளாக கருதாமல் வளர்க்க வேண்டும் எனச் சொல்லித் தருகின்றனர்.

இவ்வாறு பசுமை மற்றும் மும்பை நகரின் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து மும்பை அருகில் 100 காடுகளை உருவாக்கிட செயல்திட்டம் தீட்டி ஒருங்கிணைந்து பணி செய்து வருகின்றனர். இம் முயற்சியில் இயற்கையான வேளாண் இடு பொருட்களைப் பயன்படுத்தி நமது நாட்டு ரகங்கள் அதிகளவில் வளர்க்கப்படுவதால் அவை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எளிதாக இலக்காவது கிடையாது. மேலும் பலதரப்பட்ட விதைகள், மரங்கள் நடப்படுவதால் பலதரப்பட்ட பறவைகளும் வந்து இங்கு ஒரு இயற்கையான பசுமை சூழல் உருவாக்கப்பட்டு நமது இயற்கை வளங்கள் பெருக்கப்படுகிறது; பாதுகாக்கவும்படுகிறது. இவ்வாறு நமது நாட்டில் உள்ள பெரு நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் பசுமை இயக்கங்கள் துவங்கப்பட்டு, மக்களை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இணைத்து செயல்பட்டால் நம்மால் நமது நாட்டின் பசுமை வளங்களை பாதுகாக்கவும்,புதியதாக உருவாக்கவும் முடியும் என்பதில் சந்தேகமில்லை.

கட்டுரையாளர்: 
உதவிப் பேராசிரியர்
வேளாண்மை விரிவாக்கத்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பார்வை: Rdferenc
* Namita Devidayal, Meet numbais guerrilla gardeners, (Times of India) 19/6/2016

Leave a Reply

You must be logged in to post a comment.