கொல்கத்தா: உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு (89) இன்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.

வயது மூப்பு காரணமாக சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, கடந்த 40 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தை அடுத்து, அவர் சமீபத்தில் தான் வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், கவலைக்கிடமான நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால், சில வேளைகளில் இதயம் ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்திருக்கலாம். அந்த வகையில் சாட்டர்ஜிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அதிலிருந்து மீண்ட அவர், செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மிகத் தீவிர கிசிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 1968-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் மக்களவைத் தலைவராக 2004 முதல் 2009 வரை பொறுப்பு வகித்தார். எனினும், 2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திரும்பப் பெற்ற நிலையில், மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்ததை அடுத்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

Leave A Reply

%d bloggers like this: