கொல்கத்தா;
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி திங்களன்று காலை 8.15 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 89.

கடந்த மாதம் இரத்த அழுத்தத்தால் உருவான பக்கவாதத்தால் மிகவும் அவதிப்பட்டார். கடந்த 40 நாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்வதும் பின்னர் வீடு திரும்புவதுமாக இருந்த சட்டர்ஜிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
சோம்நாத் சட்டர்ஜி சிறுநீரகக் கோளாறு மற்றும் உடல் உறுப்புகள் செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவதிப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஞாயிறன்று காலை ஏற்பட்ட மாரடைப்பால் அவதிப்பட்டாலும், அதிலிருந்து சிறிது குணமடைந்தார். இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி 1968 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியில் இணைந்து மத்தியக் குழு உறுப்பினராக செயல்பட்டவர். 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை மக்களவையின் சபாநாயகராக பணியாற்றியவர்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு இரங்கல் 
மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மக்களவை முன்னாள் சபாநாயகரும், பத்து முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தவருமான சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த வருத்தத்தையும், துயரத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
சோம்நாத் சட்டர்ஜி, ஒரு மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி. அவர் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளங்களைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும், கூட்டாட்சித்தத்துவத்தையும் பாதுகாப்பதில் முக்கியமானதொரு பங்கினை ஆற்றினார்.

தொழில்ரீதியாக ஒரு சிறந்த வழக்குரைஞரான அவர், தொழிலாளர் வர்க்கத்தின் லட்சியங்களைப் பாதுகாப்பதற்கான வழக்குகளையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதியை உத்தரவாதப்படுத்துவதற்கான வழக்குகளையும் எடுத்துக்கொண்டு பாடுபட்டார்.
கட்சியின் அரசியல் தலைமைக்குழு, தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

மாநில செயற்குழு அஞ்சலி
சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு :
சிறந்த நாடாளுமன்றவாதியும், 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சோம்நாத் சட்டர்ஜி அவர்களது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. சோம்நாத் சட்டர்ஜி சிறந்த வழக்கறிஞராகவும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படைகளையும் பாதுகாக்கும் போராட்டங்களில் பெரும் பங்காற்றியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும் பணியாற்றிய போது முன்னுதாரணமாக திகழ்ந்தவர். அவரது மறைவால் வாடும் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.

சிஐடியு புகழஞ்சலி
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தலைவர் டாக்டர் ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இந்தியாவின் உழைக்கும் வர்க்க மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தை யும் பாதுகாப்பதில் பத்துமுறை மக்களவை உறுப்பினராக இருந்த காலக்கட்டங்களில் சோம்நாத் சட்டர்ஜி மிக முக்கிய பங்கினை ஆற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

பல்வேறு நிறுவனங்களின் தொழிலாளர்கள், ஊழியர்கள், அரசு ஊழியர்கள் நிர்வாகங்களால் பழிவாங்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் தொழிலாளர்களுக்கும்
அரசு ஊழியர்களுக்கும் ஆதரவாக நின்று அவர்களது உரிமைகளை பாதுகாத்ததில் தலைசிறந்த வழக்கறிஞராக செயல்பட்டவர்; குறிப்பாக 1974ஆம் ஆண்டு நாடு தழுவிய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் ரயில்வே ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட சமயத்தில் அதற்கு எதிராக நீதிப்போராட்டத்தை நடத்தியதில்
முன்னின்றவர் சோம்நாத் சட்டர்ஜி என்றும் குறிப்பிட்டுள்ள னர்.

விவசாயிகள் சங்கம் செவ்வணக்கம்
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தோழர் சோம்நாத் சட்டர்ஜி மறைவு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மை மாண்புகளையும் கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாப்பதில் முதுபெரும் நாடாளுமன்ற வாதியாக தலைசிறந்த பங்கினை ஆற்றியவர் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்திய உழைக்கும் வர்க்க மக்களின் நலன்களுக்காக போராடிய ஒரு போராளியாகவே அவர் வாழ்ந்தார் என்று குறிப்பிட்டுள்ள விவசாயிகள் சங்கத் தலைவர்கள், அவரது மறைவுக்கு விவசாயிகள் சங்கம் செவ்வணக்கம் செலுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் இரங்கல்
முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ‘நாடாளுமன்றத்தை முன்னிறுத்துவதில் வலிமை மிக்கவராக இருந்தார். அவரின் மறைவு, மேற்கு வங்கம் மற்றும் இந்திய மக்களுக்குப் பெரும் இழப்பு. சட்டர்ஜியின் குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

பிரதமர் இரங்கல்
நாடாளுமன்ற ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்த, ஏழை மக்களுக்காக குரல் கொடுத்த இந்திய அரசியலின் மிகப் பிரபலமானவராக திகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜியின் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டர்ஜியின்  மறைவுக்கு எனது இரங்கலையும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
(ஐஎன்என்/பிடிஐ)

Leave a Reply

You must be logged in to post a comment.