தீக்கதிர்

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்

கொல்கத்தா,
உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலை மரணமடைந்தார்.
கடந்த 1968-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் மக்களவைத் தலைவராக 2004 முதல் 2009 வரை பொறுப்பு வகித்தார். எனினும், 2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திரும்பப் பெற்ற நிலையில், மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து விலக மறுத்ததை அடுத்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்
இந்நிலையில் 89 வயது நிரம்பிய சோம்நாத் சாட்டர்ஜி வயது மூப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலம் தேறி வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த உள்ளிட்ட பல்வேறு அரசியல்  தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.