மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு சட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டம் அமலான போது இந்த வேலையைப்பற்றிய சிந்தனையும் மக்களிடம் இல்லை. வேலைக்கு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கிராம அளவில் வீடு வீடாக வந்து வேலைக்கு வருமாறு கூறினர். வேலை வந்தபோது ரூ.80 மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமம் என்கிற அடிப்படையில் இந்த வேலை துவக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங் களை தவிர பெரும்பகுதியில் இந்த வேலைக்கு ஆண்கள் வரவில்லை.  ‘பொம்பள கூலிக்கு நான் வேலைக்கு வருவதா?’ என மறுத்த நிலையும் உள்ளது. சட்டம் படிப்படியாக பல்வேறு நிலைகளை அடைந்து தற்போது ரூ. 224 சட்டக்கூலி உயர்ந்துள்ளதாக பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளைப் பார்த்து ஆச்சரியத்துடன் கிண்டல் செய்பவர்கள் ஏராளம்.

காரணம் என்னவென்றால், இந்த திட்டம் தொடங்கி 12 வருடம் ஆகிறது. சட்டக் கூலி எங்கும் அமலாகவில்லை. 100,90, 80 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. விவசாயத் தொழிலாளர் சங்கம் வலுவாக உள்ள இடங்களில், 150 ரூபாய் வரை போராடி வாங்க வேண்டியுள்ளது. அதுவும் மோடி பிரதமராக வந்த பிறகு சீர்குலைவு நடவடிக்கை வெகு வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசாங்கத்திடம் மண்டியிட்டு ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி, பன்னீர் அரசாங்கம் இதை பற்றி வாய் திறக்க மறுக்கிறது. இந்த நிலையில் கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பு ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 100 நாள் வேலைக்கு ஒதுக்கிய பணத்தில் கூலிக்கு தரும் தொகையை குறைத்து ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த பணத்தை எடுத்து 600 சமுதாயக் கூடம் கட்டுவது என ஆளும் அதிமுக அரசு முடிவெடுத்துள்ளது. அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூவும் மந்திரி மார்களை என்ன வென்று சொல்வது?  இந்த திட்டம் வந்த பிறகு பெண்கள் கையில் கையிருப்பு வைத்து குடும்பத்தை காப்பாற்றும் நிலை உள்ளது. வயதானவர் கள், பெண்கள், கணவனை இழந்தவர்கள், மகன்- மகள் இருந்தும் தனியாக வாழும் பெண்கள், படித்த டிகிரி முடித்த பெண்கள் உட்பட இந்த திட்டத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க பெண்களைப் பாதுகாக்கும் திட்டமாக உள்ளது. தமிழகத்தில் இல்லை; வெறும் காகிதத்தில் தான் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் சம்பாதித்து விடலாம் என்று கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் ஏராளம். முறைகேடு செய்து போலி அட்டை தயார் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் துணையுடன் கொள்ளை அடித்து, சமூக தணிக்கையில் பிடிபட்டு அதிகரத்தை இழந்தவர்களும் உண்டு. பல்வேறு குளறுபடிகளை களைய மக் களை திரட்டி போராடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த சட்டத்தில் பல பாதுகாப்புகள் உள்ளன, ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் வங்கியில் கேவலமான வார்த்தைகளில் மக்கள் வசவு வாங்குவதும் தொடர்கிறது. சமூகத்தில் இந்த வேலை செய்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக பார்க்கும் நிலை உள்ளது. சுதந்திரம் போராடித் தான் வாங்கினோம் சட்டம் இருந்தும் போராடித் தான் மோடி ஆட்சியில் அவலங்களை தீர்க்க வேண்டியுள்ளது. மோடி ஆட்சி நிறைவு பெறுவதற்கு இன்னும் குறைவான அமாவாசை தான் உள்ளது. அமாவாசை ஆட்சி (மோடியின் இருள் ஆட்சி) முடிந்து பெளர்ணமி வெளிச்சம் மக்கள் மீது நிச்சயம் படும். அப்போது மோடி ஆட்சி மறைந்துவிடும்.

கட்டுரையாளர் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஈரோடு மாவட்டச் செயலாளர்.

Leave a Reply

You must be logged in to post a comment.