விருதுநகர்;
திருவில்லிபுத்தூர் ஆடிப் பூரத் தேர்த் திருவிழாவில் அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மட்டும் கலந்து கொண்டார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மாலை காலமானார். இதையடுத்து, தமிழக அரசு, ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும், இத்திருவிழாவை முன்னிட்டு, மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்ட ஆ ட்சியர், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஆன்மீக சான்றோர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு, கலைஞரின் மறைவையொட்டி, துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவிக்கப்பட்டதால், அமைச்சர்கள் யாரும் தேர்த் திருவிழாவில் பங்கேற்கவில்லை.

அதேநேரத்தில், கோயில் தக்கார் ரவிச்சந்திரன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மட்டும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர்த் திருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. இதற்கென விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவில்லிபுத்தூர்-தென்காசி சாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர் இழுக்கப்பட்டது. இப்பணியில் 2 ராட்சத மண் அள்ளும் இயந்திரங்கள் மற்றும் சிறிய டோசர் வாகனம் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டது.

ராட்சத மண் அள்ளும் இயந்திரங்கள், தேரின் பின் பகுதியில் உள்ள இரண்டு இரும்பு சக்கரத்தையும் தள்ளியது. மையப் பகுதியை டோசர் மூலம் தள்ளினர். இதையடுத்து, தேர், தெற்கு ரதவீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதியை வேகமாக கடந்து வந்தது. பக்தர்களும் தங்கள் பங்குக்கு பெரிய வடத்தை பிடித்து கோஷமிட்டுக் கொண்டே தேரை இழுத்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்தில் தேர் நிலைக்கு வந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.