மதுரை:
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியது தொடர்பாக சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் உள்ளிட்ட ஆறு பேரையும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க மதுரை மாவட்ட சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தியது தொடர்பாக கடந்த ஆக. 5-ஆம் தேதி முதல் நடைபெற்ற தொடர் சோதனையில் சுங்கத்துறை உதவி ஆணையாளர் வெங்கடேசலு, சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு ஆக. 7-ஆம் தேதி மதுரை சிபிஐ நீதிமன்ற நீதிபதி கணேசன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் வெங்கடேசலு, கலுகாசலமூர்த்தி, ராமகிருஷ்ணன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தமயந்தி, தேவகுமார், முத்துக்குமார் ஆகிய ஆறு பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கணேசன் முன்பு இந்த மனு திங்களன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆறு பேரையும் ஆக. 16-ஆம் தேதி வரை விசாரிக்க அனுமதி அளித்தும், ஆறு பேரையும் விசார
ணைக்காக மதுரை, திருச்சிக்கு மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும், ஒரு நாளில் இருமுறை வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை துன்புறுத்தக்கூடாது. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியைச் செய்து கொடுக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் விசாரிக்க தனியாக பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் சிபிஐ காவலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: