அகர்தலா;
திரிபுராவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதாக, ஆகஸ்ட் 3-5 தேதிகளில் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றுவந்த உண்மை அறியும் குழுவிவரித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் 2018 மார்ச் மாதத்தில் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இக்கூட்டணி அரசாங்கத்தால் திரிபுராவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது. இந்தக்குழுவில் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணித் தலைவர் மேதா பட்கர், அகில இந்திய விவசாய மகாசபையின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ராம் சிங், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கே.ராகேஷ், திரிபுரா மாநிலத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜிதேந்திர சௌத்ரி, சங்கர் பிரசாத் தத்தா மற்றும் ஜர்னா தாஸ் வைத்தியா மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான நாராயண் கார் முதலானோர் இடம் பெற்றிருந்தனர்.இவர்கள் திரிபுரா மாநிலத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஓர் இடைக்கால அறிக்கையை சனிக்கிழமை மாலை புதுதில்லியில் உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்க தலைமையகத்தில் வெளியிட்டனர். இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அசோக் தாவ்லே, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா, நிதிச்செயலாளர் கிருஷ்ணபிரசாத் மற்றும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணியின் கன்வீனர் டாக்டர் சுனிலம், அகில இந்திய விவசாய மகாசபையின் பொதுச் செயலாளர் ராஜாராம் சிங் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திரிபுராவில் ஜனநாயகப் படுகொலை

• 2018 மார்ச் மாதத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்கள் தங்களுடைய குண்டர்கள் மற்றும் கிரிமினல்களின் மூலமாக திரிபுரா முழுவதும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வன்முறைச் செயல்களில் ஈடுபடத்துவங்கி விட்டார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவப்பட்டிருந்த லெனின், காரல் மார்க்ஸ், பகத்சிங், சேகுவேரா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளையும், தியாகிகளின் நினைவுச் சின்னங்களையும் இடித்துத்தள்ளினார்கள்.

• பாஜக – ஐபிஎப்டி குண்டர்கள் மிகவும் கொடூரமான முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் நான்கு பேரைக் கொலை செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கொலைசெய்த எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

750 அலுவலகங்கள் தீக்கிரை

• மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 750க்கும் மேற்பட்டஅலுவலகங்கள், விவசாய சங்கங்கள், கணமுக்தி பரிஷத் அலுவலகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களை தாக்கி, எரித்து, நாசப்படுத்தியுள்ளனர்; பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். குறிப்பாக போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்க அலுவலகங்களை இடித்துத்தரைமட்டமாக்கினர். இதர இடதுசாரிக் கட்சிகளின் அலுவலகங்களையும் தாக்கினர். இத்தாக்குதல்கள் அனைத்தையும் காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்த்தார்களே தவிர, இவற்றைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

• முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கட்டி எழுப்பப்பட்ட 150 கட்சி அலுவலகங்களையும், 15 தொழிற்சங்க அலுவலகங்களையும் அரசாங்கத்தின் நிலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன என்று கூறி சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியுள்ளார்கள்.• 2100க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. சில தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

• 500க்கும் மேற்பட்ட கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நூறு பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

• எண்ணற்ற பெண்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குண்டர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக கமல்பூர் என்னுமிடத்தில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களின் கருக்கள் சிதைந்துவிட்டன.

• சாமானிய மக்கள், இடதுசாரிக் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்காக, அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன், அவர்களின் 500க்கும் மேற்பட்ட கடைகள், ரப்பர் தோட்டங்கள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அவர்களின் மீன்,கோழி,ஆடு மற்றும் பன்றிப் பண்ணைகள் சூறையாடப்பட்டன. 60க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் சேதப்படுத்தப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.

• இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று கூறி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை. மதிய உணவு ஊழியர்கள் 80 பேரும், நூற்றுக்கும் மேற்பட்ட குழாய் ஆபரேட்டர்களும் அராஜகமான முறையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

• இந்திய-ஜெர்மன் திட்டத்தில் வேலை செய்து வந்த 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.• இடது முன்னணிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி எண்ணற்ற கடைக்காரர்கள், அவர்களின் வர்த்தகத்தைத் தொடரமுடியாதவாறு தாக்கப்பட்டுள்ளனர். பேருந்து உரிமையாளர்களை, அவர்களின் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

• உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரதிநிதிகளில் 2100க்கும் மேற்பட்டவர்கள் இதுநாள்வரையிலும் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கின்றனர். அதே சமயத்தில் ஸ்தலமட்டத்தில் உள்ள குண்டர்களின் உதவியுடன் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

• இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறி மிரட்டிப் பணம் பறித்துக் கொண்டுள்ளனர்.

• இடது முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டுள்ளன.

• முற்போக்கு நாளிதழான “டெயிலி தேசர் கதா” விநியோகிப்பவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்நாளிதழின் செய்தியாளர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். நாளேட்டின் பிரதிகளை ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். சில பத்திரிகைகள் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்களின் செய்தியாளர்களையும் தாக்கியிருக்கின்றனர்.

பாஜக குண்டர்களது தாக்குதல்களின் கொடூரமான அம்சங்களை, திரிபுராவின் முன்னாள் முதல்வரான மாணிக் சர்க்கார் பழங்குடியின மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றபோது அவருடைய காரைத் தடுத்து நிறுத்தியதன் மூலமாக நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த உணவுப் பாதுகாப்பு முறை சீர்குலைந்ததை அடுத்தும், இடது முன்னணி அரசாங்கத்தின்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த சமூகப் பாதுகாப்பு, தற்போது மறுக்கப்பட்டுவருவதை அடுத்தும், அவர்களைப் பார்ப்பதற்காக மாணிக் சர்க்கார் சென்றார்.ஆனால் அவரை அங்கே செல்லாதவாறு பாஜக குண்டர்கள் தடுத்துள்ளனர். மாணிக் சர்க்கார் திரிபுரா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரையே தன்னுடைய கடமைகளைச் செய்யவிடாமல் குண்டர்கள் தடுத்துள்ளனர். இவ்வளவையும் காவல்துறையினரின் கண்முன்னாலேயே செய்துள்ளனர். எனினும் மாணிக்சர்க்காரும் தோழர்களும் பின்வாங்க உறுதியுடன் மறுத்ததைத்தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க முடிந்தது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.