ஈரோடு,
ஈரோடு தடப்பள்ளி ராஜ வாய்க்கால் இறுதிப் பகுதியான அனந்தசாகரம் ஏரி பகுதிக்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பகுதிகளுக்கு கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தடப்பள்ளி ராஜ வாய்க்காலின் கடைமடைப் பகுதியான அனந்தசாகரம் ஏரி பகுதிக்கு இன்றுவரை தண்ணீர் வந்தடையவில்லை, இந்த ஏரியின் தண்ணீர் மூலமாக அருகில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. மேலும், அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. முன்னதாக, இப்பகுதியில் 450 மதகுகள் உள்ளது. இதில் 250 மதகுகள் பழுதடைந்துள்ளது. தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் சில மதகுகளை சரி செய்து உள்ளனர். ஆனால் அவற்றை சரி செய்தும் பயனில்லாத வகையில் விவசாயத்திற்காக விடப்பட்ட தண்ணீர் வீணாகி வருகிறது.

எனவே, கடைமடை பகுதியில் உள்ள அனந்த சாகரம் ஏரிக்கு தண்ணீர் விட வேண்டும். அல்லது அவசர கால தேவையாக கீழ்பவானி மைய வாய்க்காலில் உள்ள நல்லாம்பட்டி என்னும் இடத்தில் உள்ள மதகை திறந்து கவுந்தப்பாடி பள்ளம் வழியாகதண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: