சென்னை,
முன்னாள் மக்களவை தலைவரும் மூத்த இந்திய அரசியல் வாதியுமான சோம்நாத் சட்டர்ஜி மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களில் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் பெயர் பெற்றவர். அதுமட்டுமின்றி, 1996ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதினை பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். சோம்நாத் சட்டர்ஜி, மக்களவை தலைவராக ஜூன் 2004 முதல் மே 2009 வரை பதவி வகித்து, மக்களவையை திறம்பட வழிநடத்தியவர். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மதிக்கப்பெற்றவர். சோம்நாத் சட்டர்ஜியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்: தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த சோம்நாத் சாட்டர்ஜி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை கட்டிக் காக்கும் தலைவராகவும், மக்களவையை கட்சி மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை தவறாது நடத்தியவர். தமிழ்நாடு சட்டமன்ற பொன்விழாவில் கலைஞர் அழைப்பினை ஏற்று பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். ஜனநாயக மரபுகளை பாதுகாத்த மிகச் சிறந்த தலைவரின் மறைவு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் வர்க்க நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். நாட்டின் நலனுக்காகவும், அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படவும், மதச் சார்பின்மை கொள்கை காக்கப்படவும் உறுதியான முறையில் போராடி வந்தார். சமூக மாற்றத்திற்காக சோசலிச லட்சியக் கொள்கையை ஏற்று, அக்கொள்கை வெற்றிபெற தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஆவார். அவரது மறைவு கம்யூனிஸ்ட் பேரியக்கத்திற்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு அவர் சபாநாயகராக இருந்த காலத்தில் மேற்கொண்ட பல நிலைப்பாடுகள் மற்றும் அளித்த தீர்ப்புகள் உதவியாக இருக்கின்றன. பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற பேதம் இல்லாமல் அவையில் பேச அனைவருக்கும் வாய்ப்பை அளித்தவர். இந்திய ஜனநாயக அமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கே முதன்மையான அதிகாரம் உள்ளது என்பதை ஆணித்தரமாக நிறுவியவர். நாடாளுமன்ற அதிகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று தலையிட்ட போது அதை எதிர்த்து அது குறித்து குடியரசுத் தலைவரின் கருத்தை பெற்றவர். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: இந்திய நாடாளுமன்றத் தில் பத்து முறை மக்களவை உறுப்பினராக இருந்து அனைவரின் பாராட் டையும் பெறும் விதத்தில் அனைத்து விவாதங்களிலும் பங்கேற்று தனது ஆணித்தரமான திறமையால் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்தவர் சோம்நாத் சட்டர்ஜி. அவரது மறைவு இந்திய நாட்டின் பொது வாழ்வுக்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்: சோம்நாத் சட்டர்ஜி ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரர். புகழ்பெற்ற மனித உரிமை போராளி. பொது வாழ்வில் நேர்மையையும், தூய்மையையும் கடை பிடித்தவர். மக்களவைத் தலைவராக பணியாற்றிய போது அரசு மாளிகையில் தங்கியிருந்தபோது தமது சொந்த தேவைகளை சொந்த செலவில் நிறைவேற்றிக் கொண்டார். அவரது மறைவு இடதுசாரி அரசியலுக் கும், நேர்மை அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்: நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் எவ்வாறு செயல்பட்டு தனக்கு வாக்களித்த மக்களுக் கும், நாட்டிற்கும் பயன்தர வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக இருந்தவர். அவரது இழப்பு மேற்கு வங்கத் திற்கும் பேரிழப்பு.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்: சோம்நாத் சட்டர்ஜி நாட்டில் உள்ள ஏழைகள், பிற்படுத் தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நலனுக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர். இந்திய அரசியலில் அனைவருக்கும் மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

Leave A Reply

%d bloggers like this: