===ஆர். சிங்காரவேலு===
31 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடி அரசின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் கம்பனிகளுக்குத் தான் கொண்டாட்டம். சாமானிய மக்களின் வாழ்நிலையோ திண்டாட்டம். எனவே சிஐடியு அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் இணைந்து, ஆகஸ்ட் 9 ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத் தினத்தன்று, ‘‘மோடி அரசே வெளியேறு’’ என்ற முழக்கத்துடன் நாடு தழுவிய சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்தில் கருணாநிதி மறைவையொட்டி, அப்போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 9 போராட்டத்தின் முத்தாய்ப்பாக, மோடி அரசை எதிர்த்து தில்லி நாடாளுமன்ற வீதியில் செப்டம்பர் 5 அன்று பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் முற்றுகைப் போர் நடைபெறுகிறது.

ஏன் இந்த செப்டம்பர் 5 போராட்டம்?
• ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகை, செலுத்த வேண்டிய ரூ.7லட்சம் கோடி செலுத்தாதது, வட்டியுடன் சேர்த்தால் ரூ.12 லட்சம் கோடி வராக்கடன், நாட்டின் ஒட்டுமொத்த இயற்கை வளம், கனிம வளத்தை இஷ்டம் போல் கொள்ளையடிப்பது என கார்ப்பரேட் கம்பெனிகளின் பெருங்கோடீஸ்வரர்கள் மோடி அரசு உள்ளது. நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி போன்ற 36 சாமானிய மக்களின் வங்கி சேமிப்பு ரூ.40,000 கோடியை சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடும் வரை மோடி அரசு வேடிக்கை பார்த்தது.

• 4 ஆண்டுகளில், ரூ. 1.96 லட்சம் கோடி பொதுத்துறை பங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தில்லி செங்கோட்டை, தாஜ்மஹால், தெலுங்கானாவில் உள்ள கோல்கண்டா கோட்டை போன்ற வரலாற்று சின்னங்களை பராமரிக்கும் பணி கூட டால்மியா முதலாளிக்கு 45 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

• பொதுத்துறை மருந்து உற்பத்தி கம்பெனிகள் தனியாருக்கு விற்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சமுதாய சுகாதார மைய நிலத்தில் 3 ஏக்கர் தனியாருக்கு மருத்துவமனை கட்ட இடம் வழங்கப்படுமாம். அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகள் மருந்து வினியோக சந்தையில் நுழைகின்றன. இது 20 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு, 7.5 லட்சம் சில்லரை மருந்து விற்பனை கடைக்காரர்களின் வாழ்வாதாரத்திற்கு வேட்டு வைக்கும். இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகள் இஷ்டம் போல் கட்டணங்களை உயர்த்த கமிஷன் துணைபோகும். மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் கொள்ளை நடக்கும்!

• ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, 40சதவீத வங்கி கடன்கள் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்வி, வீட்டுவசதி, சமூக கட்டமைப்பிற்காக வழங்கப்பட வேண்டும். 18 சதவீத கடன் விவசாயத்திற்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும். ஆனால் மோடி ஆட்சியில் இது 12 சதவீதம் ஆக குறைந்தது மட்டுமல்ல. ரூ.100 கோடிக்குள் விற்பனை உள்ள உணவு மற்றும் விவசாயப் பொருட்களை பதப்படுத்துதல் கம்பெனிகளுக்கு வழங்கப்படும் கடன்களும் விவசாயக் கடன்களாக கருதப்படுமாம். ஆனால் ஏழை விவசாயிகள் கடன் வாங்க முடியாமலும்,கடன் கிடைத்தாலும் திருப்பிக் கட்ட முடியாமலும் கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

• 2018 மார்ச் 31- கணக்குப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.83 லட்சம் கோடி இருப்பு உள்ளது.இதில் 85 சதவீதம் சாமானிய மக்களுடையது. இந்த சேமிப்புக்கு 9 சதவீதத்திற்கு மேல் இருந்த வட்டி விகிதம் 6 சதவீதம் ஆக குறைந்துவிட்டது.பி.எப்.சேமிப்பு மீது வட்டியும் 8.55 சதவீதம் மட்டுமே. சேமிப்பாளர்கள் அனைவரும் பங்கு சந்தைக்கு,யூக வணிகத்திற்கு செல்லவேண்டும் என்பதே மோடி அரசின் விருப்பம்.வங்கிகள் தனியார்மய முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

• ரயில்வே பயண டிக்கெட்டில் இப்போது 47 சதவீதம் மானியம், விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைப்படி,ரயில்வே தனியார்மயமானால் டிக்கெட் கட்டணம் இரட்டிப்பாகும். உள்நாட்டு டீசல்/எலெக்ட்ரிக் என்ஜின்கள், கோச்சுகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஆலைகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக கூடுதல் விலையில் இறக்குமதி செய்யும் அவலநிலை உள்ளது.

• 2003 மின்சாரச் சட்டம் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தனியார்மய நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது. மாநில அரசுகளின் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்வதை குறைத்து, தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதல் விலைக்கு வாங்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

• பெட்ரோல், டீசல் விற்பனை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வரப்படவில்லை. ஜிஎஸ்டியில் அதிக பட்ச வரி 28 சதவீதம். ஆனால் பெட்ரோல்/டீசல் விலையில் கிட்டத்தட்ட சரிபாதி மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரி. அரசுத்துறையை விட,தனியாரின் மேலாதிக்கமே பெட்ரோலியத் துறையில் உள்ளது.

• எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, விவசாய விளைபொருட்களுக்கு, உற்பத்திச் செலவை விட 50 சதவீதம் கூடுதலாக ஆதார விலை இருக்கவேண்டும். ஆனால் அரசு அதை ஏற்க மறுக்கிறது. நெல் மற்றும் கோதுமை உற்பத்தியில் 20 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது.கடந்த 25 ஆண்டுகளாக, தேவை இருப்பினும் உர உற்பத்தியை உயர்த்திடவில்லை.

• ஆண்டில் 30 நாட்கள் கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. நூறுநாள் வேலை திட்டத்தின் கீழும் வேலைநாட்கள் குறைந்து வருகிறது. விவசாயத் தொழிலாளருக்கான குறைந்தபட்சக் கூலியை அமலாக்க எந்த ஏற்பாடும் இல்லை. தற்போதுள்ள நில உச்சவரம்பு சட்டங்களின்படி, 5.19 கோடி ஏக்கர் நிலம் உபரிநிலம் என ஒரு ஆய்வு கூறுகிறது. மறுபுறம் நிலமற்ற ஏழைகள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.

• தொழிலாளர் போராடிப்பெற்ற சட்டங்கள்/உரிமைகளை பறிக்க, மோடி அரசு பல நாசகர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பேக்டரி சட்டத் திருத்தப்படி, 70 சதவீத பேக்டரிகள் சட்டப்பாதுகாப்பிலிருந்து வெளியேறுகின்றன. நவீன தாராளமயக் கொள்கைகள் தீவிர அமலாக்கத்தால், பொதுத்துறையில் 50 சதவீதமும், தனியார் துறையில் 70 சதவீதமும் காண்ட்ராக்ட் தொழிலாளர் உள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், காண்ட்ராக்ட் தொழிலாளர், நிரந்தரத் தொழிலாளரின் ஊதியத்தில் 25 சதவீதம் மட்டுமே பெறும் நிலை உள்ளது. 50-க்கு கீழ் காண்ட்ராக்ட் தொழிலாளரை பயன்படுத்தும் காண்ட்ராக்ட் லைசென்ஸ் பெறத் தேவையில்லையாம். இதனால் தேசிய வேலைதிறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உற்பத்தி பிரிவுகளில் கூட, குறைந்த ஊதியத்தில், பயிற்சியாளர்களை நியமிக்க முடியும்.

• குறிப்பிட்ட காலத்திற்கான வேலை, அதிகபட்சம் 3 ஆண்டுகள் வேலை என நிலையாணை சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. இதனால் தொழிலாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமை, வேலைநிறுத்த உரிமை அனைத்தும் பறிபோகின்றன. 44 அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் 4 சட்டத்தொகுப்புகளாக சுருக்கப்பட்டு உரிமைகள் பறிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பில், சமூகப்பாதுகாப்பு பெற முறைசாரா தொழிலாளர் ஊதியத்தில் 12.5 சதவீதம் மாதாமாதம் அரசுக்கு செலுத்தவேண்டுமாம். சுயவேலைவாய்ப்பு பெற்றோர் 20 சதவீதம் செலுத்தவேண்டுமாம்! பி.எப்.,இ.எஸ்.ஐ.,கட்டுமான நல வரி உட்பட ரூ.12 லட்சம் கோடி டெபாசிட், பங்குச் சந்தையில் முதலீடு செய்ய, இதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளைக்கு வழிவகுக்க மோடி அரசு முயற்சித்து வருகிறது.

• ஒரு கோடிக்கும் மேற்பட்ட அங்கன்வாடி போன்ற மத்திய அரசின் திட்ட ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து, அதற்கான ஊதியம், சமூக பாதுகாப்பு வழங்க அரசு தயாராக இல்லை.

இப்படி அடிப்படையான பிரச்சனைகளில் நான்காண்டுகால மோடி ஆட்சி, இந்திய மக்களுக்கு வேதனையே தந்திருக்கிறது. ஊழல் முடை நாற்றம் எடுக்கும் மோடி ஆட்சி, அதிலிருந்து மக்களை மதரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது.

எனவேதான், மோடி ஆட்சியே, சாமானிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்று இல்லையென்றால் வெளியேறு என்ற தேசபக்த முழக்கத்துடன், தில்லியில் செப்.5-ல் 5 லட்சம் தொழிலாளர், விவசாயிகள், விவசாய தொழிலாளர் பங்கேற்கும் மாபெரும் பேரணியில் தமிழகத்திலிருந்து ஆயிரம் ஆயிரமாய் பங்கேற்போம்!
நாடாளுமன்ற வீதியை ஸ்தம்பிக்கச் செய்வோம்!

Leave A Reply

%d bloggers like this: