கோவை,
கோவையை அடுத்த சோமனூரில் செயல்பட்டு வந்த குட்கா குடோனில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் ஆய்வுகளைக் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆறு மாதத்தில் மட்டும், சூலூர் கண்ணம்பாளையம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் இதுவரை மூன்று குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், தற்போது நான்காவது குடோனாகக் கோவையை அடுத்த சோமனூர் பகுதியில் மேலும் ஒரு குட்கா குடோனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த குடோனை அதிகாரிகள் சோதனை செய்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், கோவையில் ஏற்கெனவே 3 குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது 4 ஆவதாக இந்த குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குடோனின் உரிமையாளரான ஜித்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது போன்ற குடோன் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், கோவையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.