திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தில் 15 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்கு வருவதை இந்த தேதிகளில் தவிர்க்குமாறு தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் இரண்டாவது முறையாக கேரளத்தில் கடுமையான மழைபாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு இம்முறை கேரளத்தில் ஏற்பட்டுள்ளது. 27 நீர் தேக்கங் களை திறந்து விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவுகளும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் உள்ளனர். பத்தாயிரம் வீடுகள் வரை முற்றிலும் தகர்ந்து விட்டன. பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் தகர்ந்துள்ளன.

இந்நிலையில் திங்களன்று இடுக்கி எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு மழை குறைந்துள்ளது. அணையில் நீர்வரத்தும் குறையத்தொடங்கியதால் பெரியாறில் திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வடியத்தொடங்கியதும் பலர் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக உள்ளனர். சேறும் சகதியும் வீடுகளுக்குள் நிறைந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

அச்சம் விலகியது
இடுக்கி அணையின் நீர்மட்டம் 2400 அடியிலிருந்து 2 அடி குறைந்து திங்களன்று 2398 அடியாக இருந்தது. பெருமழையும், பெரியாறில் 26 ஆண்டு களுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் குறையத் தொடங்கியது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அச்சம் விலகிய மக்கள் இடுக்கி அணையின் ஷட்டர்கள் திறந்து விடப்பட்டுள்ள நீரின் ஆக்ரோஷத்தைக் காண ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்றனர்.

நிலச்சரிவையும் சாலைகள் துண்டிக்கப் பட்டதால் ஏற்பட்டுள்ள சிரமங்களையும் பொருட்படுத்தாமல் வந்த அவர்கள் 5 ஷட்டர் களில் வழியும் தண்ணீரை பயம் கலந்த ஆர்வத்தோடு கண்டுகளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: