நாகா்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்து திங்கள்கிழமை காலை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீா்த்தது.பெருஞ்சாணி அணை உச்ச
பட்ச நீா்மட்டத்தை எட்டியதால் அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கனஅடி உபரிநீா் திறந்து
விடப்பட்டது. இதனால் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவ மழையால் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே அணைகள்,குளங்கள் மற்றும் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமை இரவு தொடங்கிய மழை, இரவு முழுவதும் பெய்ததால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வயல்கள், வாழைத் தோட்டங்கள், தென்னந்
தோப்புகள் மற்றும் விளை நிலங்களில் மழை நீா் தேங்கியுள்ளது. மேலும்
1,500-க்கும் மேற்பட்ட குளங்களில் மறுகால் பாய்ந்து வருகிறது.அணைப் பகுதிகளில் நீா்பிடிப்பு
பகுதியாக கருதப்படும் பாலமோரில் அதிகபட்சமாக 35 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதனால் அணைகளுக்கு வரும்நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,066 கனஅடி தண்ணீா் உள் வரத்தாக வந்துகொண்டிருந்தது. அணையின் நீா் இருப்பு 21.70 அடியாக உள்ளது. அணையில் இருந்து763 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 75.65 அடியாக உயா்ந்தது. அணைக்கு விநாடிக்கு 631 கன அடி தண்ணீா் வரும் நிலையில் 671 கனஅடி தண்ணீா் பாசனத்திற்காக விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதே நேரம் அணை உச்சகட்ட நீா்மட்டத்தை எட்டியுள்ளதாலும், தொடா்ந்து நீா்வரத்து அதிக
ரித்துள்ளதாலும், வழக்கமாக வெளியேறும் தண்ணீரை அடைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெருஞ்சாணி அணையை ஆய்வு செய்தனா்.

அணையின் பாதுகாப்பு கருதியும், நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையிலும்,திங்கள்கிழமை காலை பெருஞ் சாணி அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. பின்னா் பிற்பகலில் அணைப் பகுதியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை நீா் ஆதார செயற்பொறியாளா் வேதஅருள் சேகா் கூடுதலாக உபரி நீரை திறந்து விடுமாறு அறிவுறுத்தினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.