கோவை,
கடந்த 30 ஆண்டுகளாக வரி மற்றும் கிரயத்தொகை செலுத்தி வந்த குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என சொல்லி அகற்ற நிர்பந்திக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஜீவா நகர் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எருக்கம்பெனி அருகே அமைந்துள்ளது ஜீவா நகர். இப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 1988 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம், ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடுகள் கட்டுவதற்கு கடன் வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்கான கிரையத்தொகை மற்றும் குத்தகை தவணைத் தொகைகளை கடந்த 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் செலுத்தி வருகின்றனர்.இதனிடையே, ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என அக்குடியிருப்புகளை சுற்றியுள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் குடிசைமாற்று வாரியம், மாவட்ட ஆட்சியர், கோவை மாநகராட்சியை எதிர்மனுதாரராக சேர்த்துள்ளனர். நீதிமன்றமும் ஜீவா நகர் மக்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்துவிட்டு பின்னர் அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் எதனையும் உள்வாங்கிக் கொள்ளாத மாநகராட்சி மற்றும் நகரமைப்புத் துறையினர் வாய்மொழியாக குடியிருப்புகளை காலி செய்ய நிர்பந்திப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஜீவா நகரில் வசிக்கும் 204 பேருக்கும் இருக்கின்ற இடத்தை கிரையம் செய்து கொடுக்க சட்டரீதியான நடவடிக்கையை குடிசை மாற்று வாரியம் எடுக்கக் வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் புருசோத்தமன் தலைமையில் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: