திருப்பூர்,
நத்தக்காடையூர் அருகே பழையகோட்டையில் ஞாயிறன்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ. 8 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே, நத்தக்காடையூர்- பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்த சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 40 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 20 மாடுகள் மொத்தம் ரூ. 8 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்தச் சந்தையில் அதிகபட்சமாக ரூ. 65 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கயம் இன மயிலைப் பசு விற்பனையானது. அந்தியூர் சந்தையால் பாதிப்பு: ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள குருநாதசாமி கோயிலில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தற்போது கால்நடைகள் சந்தை நடப்பதால், பழையகோட்டை சந்தைக்கு குறைவான காங்கேயம் இன மாடுகளே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அடுத்த வாரங்களில் இந்த சந்தைக்கு மாடுகள் அதிக அளவில் வரும் என சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.