மேட்டூர்
கர்நாடகாவில் மழை பொழிவு குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைந் துள்ளது. திங்களன்று நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,14,045 கன அடியாக உள்ளது.

அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால், கடந்த 23ஆம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. அதன் பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 117 அடியாகக் குறைந்தது. இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூருக்கு நீர்வரத்து, 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து 1.30 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது.

இதனால், காவிரி நீர் செல்லும் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகப் பட்டினம், ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இந்தநிலையில் கர்நாடகாவில் மழை குறைந்து தண்ணீர் திறப்பும் குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,14,045 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 120.30 அடியாவும், நீர் இருப்பு 93.95 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1,14,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் கொட்டுவதால் திங்களன்றும் பரிசல்களை இயக்கவும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.