காஞ்சிபுரம்,
வேலைவாய்ப்புகளை உருவாக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து செப்டம்பர் மாதம் 15ம் தேதி “எங்கே எனது வேலை” என்ற முழக்கத்துடன் மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணாப் போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது.

சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற் றது. மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநிலப் பொருளாளர் எஸ்.தீபா, மத்தியக்குழு உறுப்பினர்கள் ரெஜிஸ்குமார், தாமோதரன், ஜென்னி, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன், மாவட்டத் தலைவர் மபா.நந்தன் உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2011ம் ஆண்டு டிசம்பர் முதல் 2013 டிசம்பர் வரை 7.4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. 2014 முதல் 2016 வரை 2.7 லட்சம் வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இது 84 சதம் சரிவாகும்.

திறன் இந்தியா திட்டத்தில் 2014 -15ல் 4.5 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றனர். இதில் 873 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு குறித்த முழுமையான தகவல்கள் தற்சமயம் கிடைப்பது அரிதாகவே உள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் 24 லட்சம் காலிப்பணியிடங்களை அழிப்பதற் கான வேலைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 84 லட்சம் இளைஞர்கள் பதிவுசெய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர். தமிழக அரசில் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை பூர்த்தி செய்திட திட்டமிடல் ஏதும் செய்யாத மாநில அரசு பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் 5800 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.

தனியாரை வரவேற்கும் தேர்வாணையம்
நவீன தொழில்நுட்பத் திட்டம் என்ற பெயரில் டிஎன்பிஎஸ்சி ஜூலை 4 ஆம் தேதி 48 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தில் ஆணையம் நடத்துகிற பல்வேறு நிலைப் பணியாளர் தேர்வுக்கான குறிவகை கணினி வழித் தேர்வை நடத்திக் கொடுக்க அனுபவமிக்க நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 20 லட்சம் பேர் பங்கேற்ற குரூப் 4 போன்ற தேர்வுகளை டின்பிஎஸ்சி நடத்தியுள்ள நிலையில் ஏன் தனியாரை இதில் புகுத்தவேண்டும். தமிழகத்தில் மிகச் சிறந்த பல்கலைக்கழகம் எனப் பெயர்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் மோசடி வெளிவந்துள்ள நிலையில் தனியார் தேர்வு நடத்துவது முற்றிலும் தவறாகும். பேராசிரியர் துவங்கி அலுவலக உதவியாளர் பணிவரை நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அரசின் கொள்கையின் காரணமாகத் தனியார் துறை வேலைவாய்ப்பும் உயரவில்லை. தற்சமயம் 50 ஆயிரம் சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

வேளாண் சார்ந்த தொழில் திட்டங்களை துவங்கவும் அரசிடம் எந்தத்திட்டமும் இல்லை. அரசுத்துறையில் காலியாக உள்ள அனைத்துப்பணியிடங்களையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை ஒழித்துக்கட்டும் நோக்கத்தோடு வெளியிட்டுள்ள அரசு ஆணை 56யை திரும்பப்பெற வேண்டும், அரசு வேலைவாய்ப்பில் தனியார் துறையைப் புகுத்தும் முயற்சியை அரசு கைவிட வேண்டும், ஆசிரியர் பயிற்சிக்கான தகுதிச் சான்று பெறுவதற்கு ஏற்கனவே டிஆர்பி, டிஇடி ஆகிய தேர்வுகள் உள்ள நிலையில் மற்றொரு புதியத் தேர்வை கொண்டு வருவதைக் கைவிட வேண்டும்.அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறுதொழில்கள், வேளாண் துறையில் புதிய திட்டங்களை அரசு கொண்டுவரவேண்டும், சமுக பாதுகாப்பற்ற முறையில் பணிபுரிந்து வரும் அனைத்து இளைஞர்களுக் கும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.