திருப்பூர்,
திருப்பூர் தியாகி பழனிச்சாமி நகர் அருகில் ஊருக்கு நடுவில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமலாக்குவது சுற்று வட்டாரத்தில் குடியிருக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், தொற்று நோயையும் ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

திங்ளன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தியாகி பழனிசாமி நகர் கிளை செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் மாநகரக்குழு உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உள்பட அப்பகுதியைச் சேர்ந்தோர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியைச் சந்தித்து முறையிட்டனர். இதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் 10 மற்றும் 11ஆவது வார்டுகளில் 3250 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இரு வார்டுகளுக்கும் பொதுவாக தியாகி பழனிசாமி நகரில் உள்ள சுடுகாடு பயன்பட்டு வருகிறது. அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைத்திட உத்தேசித்து உள்ளதாக தெரிகிறது. மக்கள் குடியிருக்கும் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரித்தல் பணி மேற்கொள்ளப்பட்டால் காற்று மாசுபடும், சுவாசக் கோளாறு ஏற்படும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொடும் தொற்று நோய்த் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். மாநகராட்சி நிர்வாகம் உத்தேசித்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் 10, 11ஆவது வார்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதேபோல் தியாகி பழனிசாமி நகரில் சாமிநாதபுரம் பிரதான சாலையில் எஸ்.ஆர்.பேக்கரி எதிரில் சாக்கடை நீர் தேங்கி தினசரி அந்த சாலையில் வேலைக்குச் சென்று வரும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அந்த சாலையின் தென்புறம் சாக்கடை நீர் தேங்கி மாதக்கணக்கில் சுத்தம் செய்ய ஆட்கள் வராததால் டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தாக்குதலுக்கு பெரியோர் முதல் குழந்தைகள் வரை பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாக்கடையை தூர்வாரவும், குப்பைகளை அகற்றவும், பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.