உளுந்தூர்பேட்டை,
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3000 ஆகவும், கடும் ஊனத்திற்கு ரூ. 5000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட 3 ஆவது மாநாடு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் ஆகஸ்ட் 13 திங்களன்று மாவட்டத் தலைவர் பி.முருகன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கே.சாந்தி கொடியேற்றினார். எம்.எஸ்.அண்ணாமலை வரவேற்றும், பி.வேலு அஞ்சலி தெரிவித்தும் பேசினர். மாநில துணைத் தலைவர் எஸ்.சண்முகம் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம். ஆறுமுகம் வேலை அறிக்கையும், வரவு, செலவு அறிக்கையும் தாக்கல் செய்தார். ஏ.நடேசன் தீர்மானங்களை முன்மொழிந்தார். சகோதர அமைப்புகளின் தலைவர்கள் பி.சுப்பிரமணியன், கே.வேலாயுதம், எம்.கே.பழனி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் பி.ஜீவா நிறைவுறையாற்றினார். டி.ராஜகுமாரி நன்றி கூறினார்.  கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் 100 நாட்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பிரச்சனையின்றி வீடுகட்டித்தர வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வழங்கி குறைந்தபட்ச தினக்கூலியை உறுதிப்படுத்திட வேண்டும், அரசாணை எண் 41ஐ உறுதியாக அமலாக்கி 40 விழுக்காடு ஊனத்திற்கு அனைத்து சலுகைகளையும் அமலாக்கு என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 11 நிர்வாகிகள் உள்ளிட்ட 21 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழுவிற்கு தலைவராக பி.முருகன், செயலாளராக எம்.ஆறுமுகம், பொருளாளராக கே.சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.