ஈரோடு,
இரட்டை டம்ளர் முறையை ஒழித்திட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோபி தாலுகா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோபி தாலுகா மாநாடு நம்பியூரில் வி.ஆர்.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரா.ஆறுச்சாமி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் பி.கே.கெம்பராஜ், குத்தியாலத்தூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர்.திருத்தணிகாசலம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாரிமுத்து அறிக்கை முன்வைத்து பேசினார்.முன்னதாக, இம்மாநாட்டில் கோபியில் தியாகி லட்சுமண அய்யருக்கு சிலை வைக்க வேண்டும். தமிழக அரசு தற்பொழுது உயர்த்திய வீட்டு வரி, சொத்து வரியைரத்து செய்ய வேண்டும். இரட்டைடம்ளர் முறையை ஒழிக்க வேண்டும். தலித், பழங்குடி மற்றும் மதம் மாறிய கிறித்தவ மாணவர்களுக்கு வழங்கிய கல்வி உதவித் தொகையைக் குறைக்கக்கூடாது. ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக தனசிங், செயலாளராக கே.சி.ரங்கசாமி, பொருளாளராக மாரிமுத்து, துணைத் தலைவராக பி.வெங்கிடுசாமி, துணைச் செயலாளராக மாரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.