தரங்கம்பாடி,
நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள மிக பழமையான ஆசியாவின் முதல் புராட்டஸ்டாண்டு (சீர்த்திருத்த) ஆலயமான புதிய எருசலேம் கட்டப்பட்டு 300 ஆண்டு நிறைவையொட்டி சனியன்று மாலை ஆலயத்தில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பொறையார் டி.இ.எல்.சி பெத்லேகம் ஆலய பாடகர் குழு, டி.இ.எல்.சி கோயம்புத்தூர் ஆலய பாடகர் குழுவினர் இணைந்து தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் ஏராளமான ஞானப் பாடல்களை பாடினர்.

புகழ்ப் பெற்ற ஞானப் பாடல்களை முதன் முதலாக தமிழில் 300 ஆண்டுக்கு முன்பே மொழிப் பெயர்த்து பாட வைத்து ஆலயங்களில் தமிழ் மொழிக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திய தமிழறிஞர் சீகன்பால்குவை பெருமைப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் டி.இ.எல்.சி ஆன்மீக தலைவர் எட்வின் ஜெயக்குமார், எருசலேம் ஆலய ஆயர் நவராஜ் ஆபிரகாம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தரங்கம்பாடியில் உள்ள ஒவ்வொரு கட்டடத்திற்கும் நீண்ட வரலாற்று பின்னணி இருப்பதை யாராலும் மறுத்துப் பேச முடியாது. அந்த அளவிற்கு மிக பழமையான வரலாற்றைக் கொண்ட உலகப் புகழ்ப்பெற்ற நகரம் தரங்கம்பாடி. 1706 இல் தரங்கம்பாடிக்கு வந்த சீகன்பால்கு தமிழ் மொழியை வளர்ப்பதிலும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியறிவை புகட்டுவதிலும் மிக தீவிரமாக பணியாற்றியுள்ளார்.

மதங்களை கடந்து அனைத்துத் தரப்பு மக்களும் சகோதரத்துவமாய் தரங்கம்பாடியில் இன்றும் வாழ்வதற்கு அடித்தளமிட்டவரும் அவரே. சாதியாய் பிரிந்து கிடந்த மக்களை ஒன்று சேர வழிவகுக்கும் விதமாக 1714 இல் ஆலயத்தை கட்ட வேண்டும் என முடிவு செய்து நிதி திரட்டி வந்தார். தனது ஐரோப்பிய, இந்திய நண்பர்களின் பண உதவியும் அவருக்கு துணையாக இருந்தது. 1717 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 இல் டேனீஷ் தளபதி கிறிஸ்டோபர் பிரன் லுன்காட் என்பவரால் புதிய எருசலேம் ஆலயம் கட்டுமான பணி துவக்கப்பட்டது. 1718 ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கையிலிருந்து மேற்கூரைக்கான மரங்களை வரவழைத்து ஆலய பணியை நிறைவு செய்துள்ளனர்.  தமிழறிஞர் சீகன்பால்குவை நாள்தோறும் நினைவுகூர்ந்து அவர் கட்டிய தேவாலயத்திற்கு உலகின் பல்வேறு மூலையிலிருந்து தரங்கம்பாடி வந்து செல்லும் மக்களை கை அசைத்து வரவேற்பது போல் அழகாய், கம்பீரமாய் நிற்கும் புதிய எருசலேம் ஆலயத்தை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றுமா? (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.