திருப்பூர்,
திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மாணவர்கள் சனியன்று ரயில் நிலையத்தில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு-2 சார்பாக கடந்த ஆகஸ்ட் 1 முதல் தூய்மை பணியினை கல்லூரி வளாகம், தத்தெடுத்துள்ள கருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செய்து வருகின்றனர். இத்திட்டத்தை ஆகஸ்ட் 15 வரை மேற்கொள்ளவும் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில்நிலைய நிர்வாகத்துடன் இணைந்து சனியன்று காலை தூய்மை பணியை மாணவர்கள் மேற்கொண்டனர். இதற்கு முன்னதாக நாட்டு நலப் பணித்திட்டம் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் இராமையா தலைமையுரையாற்றினார். தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை பணியை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்: கல்லூரி மாணவர்கள் சேவை பணியினை சிறப்பாக செய்ய வேண்டும். பிளாஸ்டிக் இல்லா திருப்பூராக மாற்றுவதற்கு மாணவர்கள் அரும்பாடுபட வேண்டும். மேலும், வீடுதோறும் சென்று பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பொது மக்களுக்கு துணிப்பைகளை வழங்கினர். மேலும் மழை நீரை சேமித்து வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார். இந்த நிகழ்வில், ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் சுனில்தத் முன்னிலை வகித்தார். துணைமேலாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் பர்வேஸ் ஆலம், முன்னாள் ரயில்வே பணியாளரின் குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதையடுத்து, அலகு-2 மாணவர்கள் ரயில் நிலையத்தின் வெளிப்புறமும், உட்புறமும் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மேலும், ரயில்நிலைய வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தினார்கள். இறுதியில் மாணவர்கள் தூய்மை இந்தியா உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: