உதகை,
யானை வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் சொகுசு விடுதிகளை உச்சநீதிமன்ற தீர்ப்பு படி உடனடியாக மூடும் படி வருவாய் துறை அதிகாரிகள் வழங்கிய நோட்டீசை அடுத்து ஞாயிறன்று விடுதிகளுக்கு சீல்வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகிய பகுதிகள்யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், யானை வழித்தடங்களை வரையறை செய்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்கள் மீது பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். யானைகள் வழித் தடத்தில் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்களின் உரிமையாளர்கள் தங்களின் ஆவணங்களை, அடுத்த 24 மணி நேரத்தில்மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்வார். அந்த ரிசார்ட்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டிருந்தால், ஆட்சியர் முடிவு எடுக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக, முன் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் தங்கும் விடுதிகளையும் மூடி சீல் வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

இந்நிலையில் மாயார் யானைகள் வழித்தடத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வெள்ளியன்று வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இந்நிலையில் 48 மணி நேர அவகாசம் முடிந்த நிலையில் உதகை கோட்டாட்சியர் டாக்டர் சுரேஷ் தலைமையில் மாயார் பகுதியில் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் ஏராளமான காவல்துறையினரின் பாதுகாப்புடன் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல இடங்களில் விடுதியின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.