திருப்பூர்,
செப்டம்பர் 10ஆம் தேதி 13 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்குவது என்று உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு செய்துள்ளது.

திருப்பூர் காயத்திரி மஹாலில் ஞாயிறன்று உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் கொங்கு எம்.ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சண்முகம், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, மின் கோபுர அமைப்பு எதிர்ப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன் உள்பட பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர். இந்த கூட்டத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.சண்முகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த மே 6ஆம் தேதி ஈரோட்டில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். அதன் பிறகு ஜூன் 27ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் பவர் கிரிட், மின்வாரியம் மற்றும் விவசாய ச ங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதை அகற்றுங்கள் என கோரிக்கை வைப்பது எதார்த்தத்திற்குப் புறம்பானது. எனவே மின் கோபுரங்கள் அமைக்கப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு, செல்போன் கோபுரம் அமைத்தால் வாடகை தருவது போல வாடகை தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதேசமயம் பணிகள் தொடங்கப்படாத பகுதிகளில் மின் கோபுரம் அமைக்கும் பணியை மாற்றி நிலத்தில் புதைக்கும் மின் கேபிள்களாக கொண்டு செல்ல வேண்டும் என கோரினோம்.ஆனால் வாடகை தருவது வேறெங்கும் இல்லாத நடைமுறை, அதேபோல் கேபிள் பதிப்பதும் செலவு அதிகமாகும் என்பதால் முடியாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு காணும் வரை வேறெங்கும் இத்திட்டப் பணியை மேற்கொள்ளக் கூடாது என்று கோரினோம். அதை ஏற்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் பணியை நிறுத்த உத்தரவிடுவதாக அமைச்சர் கூறினார்.

அதன் பிறகு அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அத்துடன் வாக்குறுதிக்கு மாறாக கடந்த 7ஆம் தேதி பல பகுதிகளில் மின் கோபுரம் அமைக்க நில அளவிடும் பணி நடைபெற்றுள்ளது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த அரசை எப்படி நம்புவது? இந்த அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது, வேதனையானது.மின்கோபுரம் அமைப்பது, எட்டு வழிச்சாலை உள்பட பல்வேறு திட்டங்களுக்காக விவசாய நிலங்களைப் பறிப்பது அநீதியானது. நில உரிமையைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும். எனவே இப்பிரச்சனையில் விவசாயிகள் ஏற்கத்தக்க தீர்வு காணும் வகையில், ஏற்கெனவே மின்கோபுரம் அமைக்கப்பட்ட நிலங்களுக்கு வாடகையும், இனி அமைக்க வேண்டிய பகுதிகளில் நிலத்திற்கடியில் மின் கேபிள் கொண்டு செல்லும் திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி செப்டம்பர் 10ஆம் தேதியன்று உயர் மின்கோபுரம் செல்ல திட்டமிடப்பட்டுள்ள 13 மாவட்டங்களின் ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் விவசாயிகள் பெருந்திரளானோரை அணி திரட்டி காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ அடையாளப்பூர்வமாக நடைபெறும் போராட்டமாக அல்லாமல், திட்டவட்டமான முடிவு தெரியும் வரை ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் காத்திருப்போம். எத்தகைய அடக்குமுறை, சூழ்ச்சி ஏவப்பட்டாலும் அதை மீறி இந்த தொடர் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.இக்கூட்டத்தில் பலத்த கரவொலி எழுப்பி இத்தீர்மானம் ஏற்கப்பட்டு முடிவாக அறிவிக்கப்பட்டது.

மேலும் தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயி முத்துசாமி கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், இக்குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று அந்தந்த கிராமங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.