சென்னை,
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வடசென்னை சிஐடியு அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் சித்ரச்செல்வி தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது.

வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி தில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறும் தொழிலாளி-விவசாயிகள் பேரணியில் தமிழகத்திலிருந்து ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.  அங்கன்வாடி தனியார்மயத்தை தடுக்கவும், மத்திய அரசு நிதிஒதுக்கீட்டை வெட்டிச்சுருக்கக் கூடாது எனக் கோரியும் நாடு முழுவதும் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் தமிழகத்திலிருந்து 50 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறுவது என முடிவெடுக்கப்பட்டது.  தமிழக அரசு ஊழியர்களுக்கான ஒரு நபர் குழு , அங்கன்வாடி ஊழியர்களின் பணிநிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய முக்கியமான கோரிக்கைகள் மீது விரைவாக தீர்வுகாண வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.  கூட்டத்தில் சிஐடியு நடத்தும் அயனாவரம் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் நிதியை சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில துணை பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான் ஆகியோரிடம் வழங்கினர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டெய்சி, பொருளாளர் பாக்கியம், மற்றும் மாநில நிர்வாகிகள் என்.சுசிலா, எஸ்.ரத்தின மாலா, எஸ்.தேவமணி, மற்றும் வடசென்னை மாவட்டத் தலைவர் வி.ருக்மணி, மாவட்டச் செயலாளர் என்.நிர்மலா பொருளாளர் பி.மணிமாலா உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: