மதுரை,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத் தொழிலாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்.25-ஆம் தேதி சென்னை கோட்டையை முற்றுகையிட உள்ளதாக சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் கூறினார்.

மதுரையில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற சங்கத்தின் ஏழாவது மாநில மாநாட்டை ஜி.சுகுமாறன் நிறைவு செய்து பேசினார்.  முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களே அதிகம்.ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். இந்தக் கழகத்தில் பிரதானபணியான கணினித் துறையில் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படுவதில்லை. விடுமுறை கூட வழங்கப்படுவதில்லை. அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கவேண்டும்.  பொது விநியோக முறையை முற்றாக அழிக்க மத்திய-மாநில அரசுகள் முயற்சித்துவருகின்றன. மற்றொருபுறத்தில் கொள்முதலை குறைப்பதற்கான முயற்சியிலும் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த உண்மையை நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பயனாளிகளையும் பொது மக்களையும் இணைத்துப் போராடி கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக சங்கத்தை ஒரு வலுவான சங்கமாக மாற்ற வேண்டும். தொழிற்சங்கத்தின் எல்லை என்பது மாறியிருக்கிறது என்பதையும் உணர்ந்து தொழிலாளர்கள் செயல்படவேண்டும்.

இந்தத் துறையில் ஊழல் என்பது அதிகரித்துள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் தொழிலாளர்கள் நடத்தவேண்டும். தொழிலாளர்களின் போராட்டங்களில் காவல்துறையின் தலையீடு அதிகரித்துள்ளது. நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் 25-ஆம் திகோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.  மத்திய பாஜக அரசு ஒரு மினி அவசரக்காலத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாகத் தொழிலாளர்கள் போராட்டத்தை ஊடகங்களில் காட்டக்கூடாது. ‘போராட்டம்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது என்ற நிலைக்கு அது சென்றுகொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் நலனை மத்திய அரசு குழிதோண்டி புதைத்து வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதற்கெதிராக புதுதில்லியில் செப்டம்பர் 5-ஆம் தேதி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.