கோவை,
சாதி ஆதிக்கவாதிகளின் நடவடிக்கையால் பட்டாவை கையில் வைத்து கொண்டு நான்கு வருடங்களாக இடம் கேட்டு அதிகாரிகளிடம் கெஞ்சும் தலித் மக்களின் தவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம் சுல்தான் பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாரப்பட்டி கிராமம். இங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள பகுதியில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களும், ஊரின் ஒதுக்குப்புறத்தில் தலித் அருந்ததிய மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தலித் மக்கள் சிறிய வீட்டில் ஒரே அறையில் இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாக வாழ வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என இம்மக்கள் தொடர்ச்சியான கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து 19 தலித் குடும்பத்தினருக்கு 2014 ஆம் ஆண்டு வாரப்பட்டியில் உள்ள அரசு நிலத்திற்கு வருவாய்த்துறையினர் பட்டாவழங்கினர். ஆனால் இவர்களுக்கான இடத்தை 4 ஆண்டு கடந்த பிறகும் அதிகாரிகள் இதுவரை அளந்து கொடுக்கவில்லை. இடத்தை அளந்து கொடுக்க அதிகாரிகள் வரும்போதெல்லாம் சாதி ஆதிக்கவாதியினர் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதுதொடர்பாக பயனாளிகளான தலித் மக்கள் பல முறை கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை.

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் கூறுகையில், ஏழை எளிய விவசாய கூலி தொழில்களும், கிடைக்கும் அன்றாட வேலையும்செய்து பிழைக்கும் இந்த தலித்மக்கள் பட்டாவை கையில் வத்துக்கொண்டு நான்கு வருடங்களாக இடம் இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்கிற தவிப்போடு அதிகாரிகளிடம் நடையாய் நடந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், அரசு வழங்கியுள்ள சம்பந்தப்பட்ட இடத்தில் ஆதிக்கசாதியினரின் குடியிருப்புகள் உள்ளது. இதனால் எங்கள் பகுதியில் இவர்கள் வீடு கட்டுவதா, இருவரும் ஒரே தெருவில்குடியிருப்பதா என இடத்தை அளவீடு செய்ய வரும் அதிகாரிகளை மிரட்டுகின்றனர். அதிகாரிகளும் வேறுவழியின்றி திரும்பிச்சென்று விடுகின்றனர்.மேலும், மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் படி நடவடிக்கை எடுத்தால் தவிர வேறு மார்க்கம் இல்லை. உடனடியாக இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் இல்லையென்றால் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். அரசு வழங்கி பட்டாவை கையில் வைத்துக்கொண்டு நான்கு வருடங்களாக தலித் மக்கள் குடியேற வழியில்லாமல் தவித்து வருகிற சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: