கேரளத்தில் பெய்துவரும் பெருமழை ரூ.8316 கோடி அளவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் பினராயி விஜயன் விளக்கிக் கூறினார். கேரளத்திற்கு தனியான ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து நிவாரணமளிக்க உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். உண்மையான இழப்பீடுகள் குறித்த விவரம் அறிந்துகொள்ள மேலும் கால அவகாசம் தேவைப்படும் என்றாலும் முதல்கட்டமாக தெரியவந்துள்ள இழப்புகள் குறித்தமதிப்பீடு இது. உடனடி நிவாரணமாக ரூ.1220 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்குமாறு முதல்வர் கேட்டுள்ளார். இதில் ரூ.820 கோடி தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கான அளவுகோல் அடிப்படையில் ஏற்கனவே கேரளத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்த மத்தியக்குழு பரிந்துரை செய்துள்ள தொகையாகும். ஒரே காலநிலையில் இரண்டாவது முறையாக கேரளத்தில் மழைபாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை கணக்கில் கொண்டு இழப்புகளை மதிப்பீடு செய்ய மீண்டும் மத்தியக்குழுவை அனுப்ப வேண்டும். கேரளத்தில் இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு அசாதாரணமானதும், தீவிரமானதும் ஆகும். எனவே, தனியாக ஒருதிட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற பினராயி விஜயனின் கோரிக்கை, மத்திய அரசு அவசியம் செவி மடுக்க வேண்டிய ஒன்றாகும்.

1924ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை இந்தமுறை கேரளம் சந்தித்துள்ளது. மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. 27 நீர் தேக்கங்களை திறந்து விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மத்தியக்குழு கேரளத்திற்கு வந்து பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போதே இப்படி மீண்டும் ஒரு பாதிப்பை சந்திக்க நேர்ந்தது. ஆகஸ்ட் 9 முதல் 12வரை மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை. தென்மேற்கு பருவமழைக்கு கேரளத்தில் மொத்தம் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவுகளும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் உள்ளனர். மத்திய பாதுகாப்புப் படையினரின் துணையுடன் மாநில அரசு நிர்வாகம் முழுமையான நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில அரசு கேட்ட உடன் மீட்புப் படைகளை மத்திய அரசு அனுப்பி உதவியது நல்ல விஷயம்.

கேரளம் தற்போது ஏற்பட்டுள்ள துயரத்திலிருந்து மீள நீண்ட காலம் தேவைப்படும். பத்தாயிரம் வீடுகள் வரை முற்றிலும் தகர்ந்துவிட்டன. பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் தகர்ந்துள்ளன. இத்தகைய நிலையில்தான் ரூ.8316 கோடி உடனடியாக கேரளத்திற்கு தேவை என கேட்டிருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன். வழக்கம் போல எல்லாவற்றையும் ஆய்வு செய்துவிட்டு சில நூறு கோடி மட்டுமே வழங்கி முடித்துக் கொள்ளாமல், கேரளா கேட்பதை முழுமையாக கொடுக்க வேண்டும் மத்திய அரசு என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

%d bloggers like this: