ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையானது 2 ஆயிரத்து 700 ஏக்கரில் பரந்துவிரிந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. தொழில் வளர்ச்சி மையத்தில் 200க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும், 14 தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், இருப்பு ஆலை, டயர் புதுப்பிக்கும் ஆலைகள், சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்த தொழிற்சாலைகளில் இருந்து பலதரப்பட்ட கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. விதிமுறைப்படிதொழிற்சாலைகளே சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், அதற்கு மாறாக கழிவுகள் நேரிடையாகவே நிலத்தில் வெளியேற்றப்படுகிறது.

இதன்காரணமாக பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை சுற்றியுள்ள வரப்பாளையம், தொட்டம்பாளையம், குட்டப்பாளையம், குமாரப்பாளையம், செங்குளம் போன்ற பல கிராமங்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 15 பேர் புற்றுநோயால் உயிரிழந்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சிகரமான விவரம் கூறப்படுகிறது. மேலும், கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களின் பாதிப்பால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறுரசாயன கழிவுகள் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டு வருவதால் மக்கள் ஊரையே காலி செய்யும் நிலைக்கு சுற்றிலுள்ள கிராமமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி அக்கிராமங்களில் உள்ள கால்நடைகளும், அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. உயிர் வாழ தகுதியற்ற கிராமங்களாக மாறிவிட்டதால் இங்குள்ள இளைஞர்களுக்கு பெண் தருவதற்கே பலர் மறுப்பதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதற்கும், சிப்காட் வளாகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தாலும் விதிமீறி வெளியேற்றப்படும் கழிவுகள் தொடர்பாக எவ்விதநடவடிக்கையும் மேற்கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதுவும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக சேவையாற்றி வருவதால் மஞ்சள் மாநகரம் என பெயர் கொண்டிருந்த ஈரோடு தற்போது கேன்சர் நகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், சிப்காட் தொழிற்சாலைகள் இயங்கி வரும் தோல் மற்றும் சாய ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்வதாக கூறுகிறார்கள். ஆனால், இதுமுற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பு பணிக்கும் உட்படுத்தப்படாமல் முழுமையாக அப்படியே வெளியேற்றப்படுகிறது என்பதே உண்மையாகும். இதுகுறித்து கடந்த மாதங்களில் தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள குளங்களை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் அதை பற்றி எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆழ்துளைக் கிணறுகளும் முற்றிலுமாக மாசுபட்டுவிட்டது. இதனால் வாழ்வதற்கு வழி இல்லாத நிலைமை வந்து விட்டது. கடந்த 6 மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றால் ஏதோகட்டி உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்னர் கேன்சர்உள்ளதாகக் கூறுகிறார்கள்.மேலும், தோல் தொழிற்சாலைகளில் எரித்து கம்பி தனியாக எடுக்கப்படுகிறது. தோல் கழிவுகளால் துர்நாற்றம் அதிக அளவில் உள்ளது. இதனை பொதுமக்கள் சுவாசிப்பதால் நுரையீரல் உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. குடிப்பதற்கு சரியான தண்ணீர் கிடையாது. காவிரியில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதுவும் சாக்கடை மற்றும் சாயக் கழிவுகள் கலந்து வருகிறது. இது குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. காற்றும் மாசடைந்து விட்டது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சிப்காட் தொழிற்சாலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் இருக்கும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஈரோடு மாநகரமே கேன்சர் நோய்களின் மையமாக மாறியிடும் என வேதனையோடு தெரிவித்தனர்.

து.லெனின்.

Leave a Reply

You must be logged in to post a comment.