திருவாரூர்,
சுமார் 7 ஆண்டுக்கு பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடி இரண்டு முறை நிரம்பி யுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து வெள்ள அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு உபரிநீர் திறந்து விடப்பட்டது. வெள்ளமென காவிரி நதி நீர் பாய்ந்து வருவது அறிந்து விவசாயிகள் எல்லையற்ற மகிழ்ச்சிக்கு ஆளானார்கள். ஆனால் டெல்டா மாவட்டங்களின் தற்போதைய அவலநிலை விவசாயிகளின் மகிழ்ச்சியை நீடிக்க விடாமல் மீண்டும் துயரத்தில் தள்ளி யுள்ளது. தமிழக அரசின் செய லற்ற தன்மை யும், பொருந்தாத நடவடிக்கையும் தான் இந்நிலைக்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

காவிரி நீர் என்பது வாழ்வாதாரம்:
இதுகுறித்து கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: பல்லாண்டு காலமாக காவிரி நதி நீரை நம்பி ஒன்றுபட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும், வணிகர்களும் வாழ்ந்து வருகின்றனர். பாய்ந்தோடும் காவிரி நதி நீர் என்பது வாழ்வாதாரம் மட்டுமல்ல; தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுக்கு பிறகு ஆடிப் பெருக்கு தினத்தன்று புதுமணத் தம்பதிகளும், லட்சக்கணக்கான பொதுமக்களும் நதி நீரை மலர் தூவி வழிபட்டு தங்களின் அன்னையாக பாவித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். இது ஒரு புறம் இருக்க, ஆளும் அதிமுக அரசு காவிரி நதி நீரைப் பெறுவதில் முழு வெற்றியும் தங்களுக்கே சொந்தம் என்று கூறி வெற்றி விழா கொண்டாட்டங் களை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். தமிழக உணவுத் துறை அமைச்சரோ கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாகக் கூறி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். ஆனால் தற்போதைய நில வரம் உண்மைத் தன்மைக்கு மாறாக உள்ளது.

விவசாயிகள் கண்ணீர்:
காலம் காலமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படு வதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகத் தான் ஆளும் அதிமுக அரசு தூர்வாரும் பணியைச் செய்யப் போவதாக அறிவித்து கோடி கோடியாக நிதியை ஒதுக்கும். இது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். அந்த நேரத்தில் அவசர அவசரமாக கண்ணிற்கு படும் இடங்களில் தூர்வாருவது போல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திட்டத்தை முடித்து விடுவார்கள். ஆனால் அங்கு நீரோட்டம் கடைமடை பகுதிக்கு வரை செல்லுகிற வரை இப்பணி நடந்திருக்காது. ஆளும் கட்சியினர் காக்கைக்கு சிறிதளவு உணவைப் போடுவது போல போட்டுவிட்டு மீதமுள்ள பணத்தை கொள்ளையடிப்பதற்கு மட்டுமே இந்த அறிவிப்பு பயன்பட்டு வருகிறது. தற்போதும் இதே நிலை தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி பணிக்கு தயார் நிலையில் இருந்தும் ‘தண்ணீர் வரவில்லையே’ என்ற வேதனைக் குரல் கேட்டுக் கொண்டி ருக்கிறது.

குடிமராமத்து:
தற்போதைய எடப்பாடி அரசு குடிமராமத்து பணி என்றும், நீர் நிலைகளில் உள்ள மணலை தங்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நீர்நிலைகள் சுத்தம் செய்யப்பட்டு நீரோட்டம் தடையில்லாமல் நடந்து அனைத்து விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் என்று தான் நம்பிக் கொண்டிருந்தோம். மனித உடலில் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதற்கு தடையில்லாத ரத்த ஓட்டம் எவ்வளவு முக்கியத் தேவையோ அதைப் போன்று டெல்டா மாவட்ட விவசாயம் தடையின்றி நடைபெறுவதுற்கு தடையில்லாத நீரோட்டம் அவசியம் ஆகும். டெல்டா மாவட்டங்களின் பாசன கட்டமைப்பு என்பது ஒன்றொடொன்று பிணைக்கப்பட்டுள்ள நரம்பு மண்டலம் போலத் தான்.

ஆனால் இந்த நரம்பு மண்டலத்தில் காவிரி நதி நீர் சீராக பாயவில்லை என்றும், விவசாய பணிகளை சீராக நடத்த முடியவில்லை என்றும் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் புகாரை  தெரிவித்த வண்ணம் உள்ளனர். குடிமராமத்து பணிகள் மூலமாகவும், மணலை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பின் மூலமாகவும் ஆளும் அதிமுக கட்சியினர் கொள்ளையடிப்பதற்கு வழிவகை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறையும், வேளாண்மைத் துறையும் நன்றாகவே அறியும். ஆனாலும் எதுவும் நடக்காதது போல அரசு எந்திரம் பாராமுகமாய் உள்ளது.

மேட்டூர் அணை:
மேட்டூர் அணை திறக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்பதை அறிந்த அரசு முன்கூட்டியே விவசாயிகள் வேளாண் பணிகளை தடையில்லாமல் செய்வதற்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதற்கு முனைப்புடன் செயலாற்றியிருக்க வேண்டும். வெற்றி அறிவிப்புகள் மட்டும் தான் வெளியாகி யுள்ளதே தவிர கள எதார்த்தம் வேறாக உள்ளது.  குறிப்பாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் என்பது கண்துடைப்பாக கிடைத்துள்ளதே தவிர பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை.  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளாக இருந்தாலும், கூட்டுறவு வங்கியாக இருந்தாலும் நிலை ஒன்று தான். வேளாண் இடுபொருட்களின் தட்டுப்பாடும், உரத் தட்டுப்பாடும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக ‘கையறு’ நிலையில் விவசாயிகள் உள்ளனர். விவசாயப் பணிகள் நடக்கப் போகிறது; அரை வயிற்று கஞ்சியாவது குடிக்காலம் என்ற மனநிலையில் இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்தாண்டும் ஏமாற்றம் தான்.

அவர்களுக்கு ஓரளவு உதவி வந்த நூறு நாள் வேலைத் திட்டமும் முற்றிலுமாக முடக்கப் பட்டுள்ளது.  எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், இந்த மாவட்டத்தைச் சார்ந்த உணவு அமைச்சரையும் கூட்டுறவுத் துறை அமைச்சரையும் உடன் வைத்துக் கொண்டு கள ஆய்வு மேற்கொண்டு விருப்பு வெறுப்புமின்றி விவசாயிகளின் துயர நிலையை மனசாட்சியோடு அணுக வேண்டும். உண்மைத் தன்மையை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றித் தருகிற பணிகளை செய்ய வேண்டும். வெறுமனே வெற்றுப் பேச்சை பேசிக் கொண்டு காலத்தைக் கடத்துவது நிலைமையை மேலும் மோசமாக்கும். “கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைகிற” மதியற்ற செயலை அரசு செய்யக் கூடாது. எனவே பொங்கி வரும் காவிரி நீரை விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் அனைத்து நீர்நிலைகளையும் செப்பனிட்டு நீரை பெற்றுத் தருவதோடு விவசாய பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றித் தந்து டெல்டா மாவட்ட மக்கள் முழுமையான பலன் அடைவதற்கும், நெல் உற்பத்தி அதிகரித்து கொள்முதல் பெருகுவதற்கும் காவிரி பாசன விவசாயத்தை நம்பி வாழ்கிற பல்வேறு பிரிவினரின் முன்னேற்றத்திற்கும் அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.சுந்தரமூர்த்தி கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.