திருப்பூர்,
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான காதுகேளாதோர் சீனியர் தடகள போட்டிகளில் திருப்பூர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

தமிழக அளவிலான 9ஆவது காதுகேளாதோர் சீனியர் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 10 மற்றும் 11தேதிகளில் நடைபெற்றது. இதில் கோவை, சென்னை, திருப்பூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட 25 மாவட்டங்களில் இருந்து 18 முதல் 35 வயது வரை உள்ள காதுகேளாத ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.  இதில் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த 18 ஆண்கள், 9 பெண்கள் பங்கேற்று 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீட்டர் ஓட்டம், வாலிபால், பூப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் 1500 மீ ஓட்டத்தில் சாந்தனு முதலிடமும், சுதிர்ஷ் இரண்டாமிடமும், 100 மீ ஓட்டத்தில் அருண் முதலிடமும், மணிகண்டன் இரண்டாமிடமும், 4 *100மீ, 4 * 400மீ தொடர் ஓட்டத்தில் திருப்பூர் அணி முதலிடம் பெற்றது.

பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் சூர்யா முதலிடமும், ரத்தினம் இரண்டாமிடமும், குண்டு எறிதலில் ரத்தினம் முதலிடமும், பூப்பந்து ஒற்றையர் இரட்டையர் ஆட்டத்தில் முறையே அபிநயா, மாரீஸ்வரி ஆகியோர் முதலிடத்தை பெற்றனர். கைப்பந்தில் திருப்பூர் பெண்கள் அணி வெற்றி பெற்றது. மொத்த புள்ளிகளின் அடிப்படையில் திருப்பூர் அணி 90 புள்ளிகள் பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. இப்போட்டிகளை கோவை காதுகேளாதோர் சங்கம் மற்றும் தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.