(விகடன் தடம் – ஆகஸ்ட் , 2018, இதழுக்கு நாடக பேராசிரியர் மு. ராமசாமி அளித்த பேட்டியின் சில பகுதிகள். நேர்காணல்: வெய்யில்)

ஒரு கலைஞனாக உங்களுடைய அரசியல் நம்பிக்கை எப்படிப்பட்டது?
சமத்துவமற்ற சமூகநீதியற்ற இந்த உலகத்தில், இடதுசாரி சித்தாந்தம் தான் சரியான திசைவழியை காட்டும் என்று நம்புகிறேன்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய உங்கள் பார்வை என்ன?
அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. யாரும் அரசியலுக்கு வரலாம். அந்த ஜனநாயகத்தை நான் மதிக்கிறேன் . ஆனால் அரசியல் என்பது வாழ்வியல் தத்துவம் சார்ந்தது. மக்கள் நலன் சார்ந்தது. சினிமாவைப்போல இரண்டரை மணிநேர வெற்றி தோல்விகள் அல்ல. வரலாற்றில் அரசியல் எவ்வளவு பரிணாமங்களையும் பரிமாணங்களையும் பெற்று வந்திருக்கிறது என்பதை உணர வேண்டும். சினிமாவில் கிடைத்த பிம்பத்தைக்கொண்டு மக்களிடம் ஓட்டு வாங்கி விடலாம் என்று நினைப்பது அரசியல் ஆகாது. வியாபாரம்! எல்லோரும் தன்னை எம்ஜிஆர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். எம்ஜிஆர் வெறும் நடிகர் மட்டுமல்ல, ஆரம்ப காலம் முதலே தனது சினிமாவில் தான் எப்படி வெளிப்பட வேண்டும், தனது பாத்திர இயல்பு, பாடல்கள் , அதில் வெளிப்படும் கருத்துநிலை அனைத்தின் மீதும் கவனம் கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு இயக்கத்தையும் அதன் அரசியலையும் சித்தாந்தத்தையும் நம்பினார். அந்தக் கட்சியின் கருத்துக்கள் சின்னங்களைத் தனது சினிமாவில் இடம் பெறச் செய்தார் அதற்காக அவர் பல சவால்களை எதிர்கொண்டார்.

ஒருமுறை இடைத்தேர்தல் வந்தது. தென்காசியில் சம்சுதீன் என்ற கதிரவன் திமுக வேட்பாளர். அந்தத்தேர்தலுக்காகவே ‘புதிய பூமி’ படத்தில் அவர் ஏற்ற பாத்திரத்தின் பெயரை ‘கதிரவன் ‘ என்று வைத்தார்.

‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊரறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை’….

என்ற பாடலை வேட்பாளரின் குரலாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஒலிக்க வைத்திருப்பார். இவ்வளவும் செய்து திமுகவின் வளர்ச்சிக்காக உடன் நின்ற ஒருவர் அந்தக் கட்சிக்கு எதிராக ஒரு கட்சி ஆரம்பிக்கும் போதுதான் மக்களிடம் அவருக்கு செல்வாக்கு கிடைத்தது. அவர் பக்கம் நியாயம் இருப்பதாக மக்கள் கருதினார்கள். இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்கள் திடீரென்று இடம் காலியாக இருக்கிறது என்று வருகிறார்கள். மக்கள் விவரமானவர்கள்; அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனத் தெரியும்.

இந்தியா முழுக்க கருத்துச் சுதந்திரம் அற்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறதா?
எல்லோருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயம் தானே. எல்லாக் காலங்களிலும் இந்த அடக்குமுறை இருந்து வந்திருக்கிறது. அதே சமயம் அடக்குமுறைகளுக்கு எதிராகப் படைப்பாளி புதிய சாத்தியங்களைக் காலந்தோறும் கண்டடைந்து வந்திருக்கிறான். புதிய அடக்குமுறைகளிலிருந்து கற்றுக்கொண்டு கலைஞன் புதிய மீறல்களை நிகழ்த்துவான். மீறல் என்பது கலையின் அடிப்படை இயல்பு. நாம் இன்று கைகளில் வைத்துக்கொண்டிருக்கிற கலைவடிவங்கள், தத்துவங்கள் எல்லாம் எவ்வளவோ அடக்குமுறைகளையும் மீறி நாம் காப்பாற்றிக் கொண்டுவந்தவைதான். ஆக, அஞ்சவேண்டியதில்லை. நம்பிக்கையோடு இயங்குவோம். போராட்டமும் கலையும் ஒருபோதும் ஓயாது .

கலையை கருத்தியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவி என்று நினைக்கிறீர்களா ?
‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தில் ஒரு காட்சி உண்டு. நாடக இயக்குநர் நான் வந்து அமர்வேன். பத்திரிகையாளர் , ‘உங்கள் நாடகத்தில் பிரச்சார தொனி அதிகம் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்களே ‘ என்பார். ‘ ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்துக்காக ஓய்வின்றி சுற்றிச்சுழன்ற ஒரு தேனீ….. அதனுடைய வாழ்க்கையைப் பற்றி பேசுறேன்… பெரியார் நோய்மை காரணமாக மருத்துவமனையில் படுத்திருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், ‘ ஐயா சுற்றுப்பயணம் எல்லாம் இனிவேண்டாம். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்’ என்கிறார் . ‘செத்துப்போயிருவேனய்யா…’ என்று சொன்ன ஒரு தலைவனுடைய வாழ்க்கையைப் பற்றிய நாடகம் பிரச்சாரமாக இருக்கிறது என்றால், ஆமாம் அது பிரச்சாரம்தான் ‘ என்று பெரும் கோபத்தோடும் விசும்பலோடும் இயக்குநர் சொல்வதாக முடியும். அதைத்தான் இப்போதும் உங்களிடம் சொல்லத் தோன்றுகிறது. கலை, பிரச்சாரக் கருவியாக இயங்க வேண்டிய தேவை இந்த சமூகத்தில் இருக்கிறது. ‘கலை கலைக்காகவா? மக்களுக்காகவா? ‘ என்ற கலைஞரின் நோக்கம்தான் அதைத் தீர்மானிக்கிறது. நாடகம் என்பது கற்பித்தல் என நான் நினைக்கிறேன்.

கிமு 430 இல் எழுதப்பட்ட ‘ஆண்டிகனி ‘ நாடகத்தை எமர்ஜென்ஸியோடு இணைத்து நிகழ்த்த முடிகிறது அல்லவா ? ஒரு பிரதியில் அதற்கான சாத்தியம் இருக்கிறது அல்லவா ? அது மக்களிடம் பேச விரும்புகிறது அல்லவா? அப்படி உயிர்ப்போடு இல்லாத ஒரு கலையை நாம் மியூசியத்தில் தான் கொண்டு வைக்க வேண்டும். கலை என்பது ஒரு நினைவூட்டல். இந்த சமூகத்திற்கு சமகாலப்பிரச்சனைகள் குறித்து விழிப்பூட்டவும் கடந்த காலம் குறித்து நினைவூட்டவும் வேண்டியது கலையின் முக்கியப் பணி.சமூகம் தன்னிடம் கேட்பதைத்தான் கலை வடிவம் தருகிறது . அதுதான் என் நம்பிக்கை.

உங்களது குடும்பம் பற்றி சொல்லுங்கள் ……
அம்மா ஊர் அம்பாசமுத்திரம். அப்பா ஊர் பாளையங்கோட்டை . 4. 12.1951- ல் நான் பிறந்தேன் . நான்தான் மூத்தபையன். எனக்குப் பிறகு நான்கு தம்பிகள். இரண்டு தங்கைகள் . அப்பாபெயர் முருகய்யா. அம்மா பெயர்தங்கமணி. எம்.ஏ. வரை பாளையங்கோட்டையில் தான் படித்தேன். முனைவர் பட்டத்திற்காக மதுரை பல்கலைக்கழகம் வந்தேன். என் துணைவியார் செண்பகம், பாத்திமா கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தார் . 1980- ல் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 1998-ல் கேன்சரில் இறந்துவிட்டார். எங்களுக்கு ஒரு பையன். பெயர் அபராஜிதன். அவனுக்கு இரண்டு குழந்தைகள். நான் அவர்களுக்கு தாத்தா.

Leave A Reply

%d bloggers like this: