விவசாயம் சார்ந்த தொழிலாக இருப்பது மாடு வளர்ப்பு. உழைப்பு, ஆரோக்கியம், வறட்சி உள்ளிட்ட எந்தவொரு சூழலையும் எதிர்கொண்டு வளரும் அற்புதமான நாட்டு மாட்டினங்கள் மற்றும் எருமை மாடுகளின் வளர்ப்பு விவசாயத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. குறைவாக பால் கறந்தாலும் இவை தரும் ஒவ்வொரு சொட்டுப்பாலும் தாய்ப்பாலுக்கு சமம்.

நாட்டுப் பசுமாட்டின் பாலைகாட்டிலும் திடமாகவும் சற்றேகூடுதலாக கொழுப்பு சத்துக்கொண்ட எருமைப்பால் ஊட்டச்சத்து மிகுந்தது. தண்ணீர் கலந்தாலும் நீர்த்து போகாத எருமைப்பாலே பால் சார்ந்த இனிப்பு பொருட்கள் தயாரிப்பிற்கு ஏற்றதாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் அதிக பால் உற்பத்தியினை மட்டுமே கருத்தில் கொண்டு வெண்மை புரட்சி என்ற பெயரில் அற்புதமான நாட்டு மாட்டினங்களோடு சேர்த்து எருமாட்டினங்களையும் அழித்து, நம் மண்ணுக்கு தொடர்பில்லாத கலப்பின மற்றும் மரபணு மாற்றப்பட்ட மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் அருகிப்போனது நாட்டுமாட்டினங்கள் மட்டுமல்ல எருமைகளும் தான் என்பது யாருடைய கவனதிற்கும் செல்லவேயில்லை. அவை கொத்துகொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு இறைச்சிக்காக அடிமாடுகளாக அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் மெல்ல மெல்ல நாட்டு மாட்டினங்களின் வளர்ப்பின் அவசியம் உணரப்பட்டு இன்று அழிவின் விளிம்பில் இருந்த அவற்றை பலரும் விரும்பி வளர்க்க துவங்கியுள்ளனர். நாட்டுமாட்டு பால் விற்பனையும் அதன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் அதேகாலகட்டத்தில் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் எருமை மாட்டினங்களை கண்டுகொள்ளத்தான் யாருமில்லை. தற்போது ஏறத்தாழ அழிந்தே விட்ட எருமையினத்தின் அழுகுரல் யாருக்கும் கேட்கவேயில்லை. இன்று தேடினாலும் கிடைக்காது என்ற அளவில் காணாமலே போய்விட்டது. பிற மாட்டினங்களை போல் எருமை வளர்ப்பிற்கு எவ்வித கவனிப்போ செலவோ இல்லை. நீண்ட கொம்புகளோடு கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு எதிர்ப்பு சக்தி இயற்கையிலேயே அதிகம் என்பதால் நோய்தாக்கி சாதாரணமாக இறக்காது. தனித்தீவனங்கள் எதுவும் தேவையில்லை அவிழ்த்துவிட்டால் மேச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிபால் கறக்கும். கலப்பின மாடுகளை தவிர்த்து நாட்டு மாட்டு வளர்ப்பில் ஆர்வம் காட்டிகளம் இறங்கி சாதித்து வரும் இளைஞர்கள் கூட எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. எருமை வளர்க்க தயங்குவது ஏன் என்ற கேள்வியை நாட்டுமாடுகள் மற்றும் கலப்பின மாடுகளை வளர்த்து பால் பண்ணை நடத்தி வரும் குருடம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞருமான ரவியிடம் முன்வைத்த போது, நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக நாட்டுமாடுகளுடன் எருமை மாடுகளையும் வளர்க்க ஆசைப்பட்டாலும் அவை கிடைக்காத அளவிற்கு மிக மிக குறைவாகவும் ஏதோ ஒரு இடத்தில் அரிதாக கிடைக்கும் சில எருமை கன்றுகுட்டிகளின் விலை மிக மிக அதிகமாகவும் உள்ளது.

மேலும் எருமைகளை பிற மாடுகளைப்போல் கட்டி வைத்து வளர்ப்பது சரியானதல்ல. அதனை அடைத்து வைத்து எவ்வளவு சத்தான தீவனங்கள் போட்டாலும் குறைவாகவே பால் கறக்கும், அவற்றை அதன் இயல்புப்படி மேய்ச்சலுக்கு கொண்டு சென்றால் மட்டுமே எதிர்பார்க்கும் அளவிற்கு பால் கிடைக்கும், அவை ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இன்று கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் அடியோடு அழிக்கப்பட்டு வீட்டு மனைகளான பின்னர் எருமைப்பாலுக்கு தேவை இருப்பினும் அவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது என்றார். சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காக கொல்லப்படுவது என பல்வேறு காரணங்களினால் அழிவின் இறுதி கட்டத்தில் உள்ள எருமையினங்களை வரும் தலைமுறையினருக்கு இதுதான் எருமை என பழைய நிழற்படத்தில் தான் காட்ட இயலும்.நாட்டுமாடு வளர்ப்போடு எருமை மாடு வளர்ப்பையும் ஊக்கப்படுத்த வேண்டும். இல்லையெனில் மழையோ வெயிலோ அல்லது எந்த சூழலுக்கும் சற்றும் சலனப்படாமல் சுற்றித்திரிவோரை எருமை என அதனை உதாரணம் காட்டி திட்டக்கூட முடியாத நிலைக்கு அந்த இனம் முற்றிலுமாக அழிந்தது விடும்.

இரா.சரவணபாபு

Leave a Reply

You must be logged in to post a comment.