ராய்ப்பூர்;
மோடியின் கடந்த நான்காண்டு ஆட்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள், கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட நடந்தது இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜீவ் பவன் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகையிலேயே இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும், “உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்பதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல், “பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மட்டும் ஏன் பெண்கள் அதிகம் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்?” என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

“முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பெயர் பனாமா ஆவணங்களில் வந்தபோது, அதில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். ஆனால் சத்தீஸ்கர் பாஜக முதல்வரது மகனின் பெயர் பனாமா ஆவணங்களில் வந்தும், அதுதொடர்பாக இன்னும் விசாரணை கூட ஆரம்பிக்கப்படவில்லை; இதுதான் பாஜக நாட்டை பாதுகாப்பதா?” என்றும் ராகுல் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.