மேட்டூர்;
மேட்டூர் அணை இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 11 சனிக்கிழமையன்று நிரம்பியது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை வெள்ளிக்கிழமை மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் முழுவதும் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணையும் நிரம்பி சனிக்கிழமை காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையை கடந்து நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

மேட்டூர் அணைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வெள்ளியன்று காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 119.08 அடியாக உயர்ந்தது. பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

ஏற்கனவே கடந்த மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒருலட்சத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலை யில், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியுள்ளதால் காவிரிடெல்டாபகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோ`ஹிணி கூறும்போது, ‘காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்ஃபி உள்ளிட்ட எந்த வகையிலான படமும் ஆற்றில் இறங்கி எடுக்கக்கூடாது. 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் அபாயகரமான இடங்களில் கண்காணிப்புக் குழு அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.