புதுதில்லி:
மத்திய ஆட்சியாளர்களும்- செய்தி நிறுவன முதலாளிகளும், பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை முடக்க முயற்சிப்பதாக இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) கண்டனம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு தனது முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை தங்களின் கைப்பாவை ஆக்குவதற்கு மத்திய பாஜக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. கடந்த காலங்களில் இந்த அளவு ஆர்வம் காட்டாத பாஜக, தற்போது தனது தவறுகளை மறைப்பதற்காக ஊடகங்களை வளைத்துப் போடத் துவங்கியுள்ளது. லாபம் ஒன்றே கார்ப்பரேட் ஊடகங்களின் நோக்கம் என்ற வகையில், சம்மந்தப்பட்ட ஊடக முதலாளிகளும் பாஜக-வுடன் சமரசம் செய்து வருகின்றனர். இதனால், மத்திய பாஜக அரசின் கண்ணசைவே, பல பத்திரிகைகளின் தலையங்கம் துவங்கி ஒட்டுமொத்த உள்ளடக்கத்தையும் தீர்மானிப்பதாக மாறிவிட்டது.

அண்மையில், ‘கோப்ராபோஸ்ட்’ இணையதள ஊடக நிறுவனம் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் புலன்விசாரணையில், “டைம்ஸ் ஆப் இந்தியா, ஜீ தொலைக்காட்சி, இந்தியா டுடே, இந்துஸ்தான் டைம்ஸ், ஏபிபி நியூஸ், ஜாக்ரான் குழுமம் (தமிழகத்தில் தினமலர்)” உள்ளிட்ட 25 ஊடக நிறுவனங்கள், பாஜக-வின் ஆதரவு வளையத்தில் இருப்பது அம்பலமானது.
மத்திய அரசுக்கு எதிரான செய்தியை ஒளிபரப்பி விட்டார்கள் என்று ஏபிபி நியூஸ் நிறுவனம் அண்மையில் தனது ஊழியர்கள் 2 பேரை வேலையிலிருந்து நீக்கியதும்கூட இந்த அடிப்படையில்தான்.இந்நிலையில், இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் (Editors Guild of India) கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பத்திரிகை நிறுவன முதலாளிகளும், அரசியல் சக்திகளும், பத்திரிகையாளர்களை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
“அரசை விமர்சித்து வரும் பல தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அரசு மிரட்டல் விடுத்து வருகிறது. ஒரு சில நேரங்களில் அந்த தொலைக்காட்சியே முடக்கப்படுகிறது.

தங்களுடைய முதலாளிகள் மற்றும் அரசின் நிர்ப்பந்தத்தால் தங்களின் படைப்பை மாற்றுவதும், முழுமையாக நீக்குவதும் நடப்பதாக மின்னணு ஊடகத்தைச் சேர்ந்த 2 மூத்த பத்திரிகையாளர்கள் அண்மையில் பகிரங்கமாக கூறியிருந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அரசின் இந்த மிரட்டல் போக்கிற்கு பத்திரிகை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.அரசு இதுபோல நேரடியாகவோ, அல்லது பத்திரிகை முதலாளிகள் மூலம் மறைமுகமாகவோ மிரட்டுவதை நிறுத்த வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த செயலையும் அரசு செய்யக் கூடாது. அவ்வாறு இல்லையேல், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பத்திரிகை முதலாளிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.இதேபோல பத்திரிகையாளர்களை சாதி அல்லது மத அடிப்படையிலும் சில பெரிய செய்தி நிறுவனங்கள் துன்புறுத்துவதாகவும், அரசின் அதிகாரப்பூர்வமற்ற உத்தரவின் பேரில், பல பத்திரிகையாளர்கள் மீது தேவையற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதனையும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டிக்கிறது.”
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.