தூத்துக்குடி;
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கூறினார்.

இதுதொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
கர்நாடகா, கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், மேட்டூர் அணை 120 அடியைத் தாண்டி நிரம்பி வழிகிறது. 40ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடை மடை வரை தண்ணீர் வந்துள்ளதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரலை தலைமையிடமாகக் கொண்டு 10ஆவது தாலுகா உதயமாக உள்ளது. இதனை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைப்பதாக இருந்தது. இது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால், சுதந்திர தினத்திற்கு பின்னால் புதிய தாலுகா அலுவலகம் திறக்கப்படும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வாய்ப்பே இல்லை. பசுமை தீர்ப்பாயம் நிர்வாக அனுமதி வழங்கியிருந்தாலும், உற்பத்திக்கு அனுமதி அளிக்கவில்லை. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. ஆனால், அதில் சட்ட சிக்கல் இருந்ததால் அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இரவோடு இரவாக அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டதால் அங்கு அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் இவ்வழக்கு யாரால் தொடரப்பட்டது என்பது வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.