கோவை,
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தியாவில் மொத்தம் 20 லட்சம் விசைதறிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கோவை மாவட்டம் சோமனூர், பல்லடம் பகுதியில் இயக்கப்பட்டு வரும் நிலையில், இங்கு உற்பத்தியாகும் ஆடைகள்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வகையான விசைத்தறிகளில் இருந்து கிரே காடா, ரேயான், பாலீயஸ்டர், பாலி காட்டன் போன்ற துணிவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒசேரி, மேடப்ஸ், கார்மன்ஸ் ஆகியவை நவீன ரக தறிகளில் உற்பத்தி செய்யப்படுகிறன.இந்த வகையான துணிகள் அயல்நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இவைகளுக்கு 10 சதவிகிதம் இறக்குமதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படாத துணிகளுக்கு 20 சதவிகிதம் இறக்குமதி வரியாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விசைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளுக்கு இறக்குமதி வரி ஏதும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் அயல்நாடு துணிகள் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும். இதனால் உள்நாடுகளில் உற்பத்தியாகும் துணிகளை வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி கூறியதாவது, தற்போதைய சுழ்நிலையில் விசைத்தறிஇயக்குவதே மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, உதிரிபாகங்களின் விலையும் அதிகமாக உள்ளது. மின்சார கட்டணமானது இரண்டு முறை உயர்ந்துவிட்டது. விசைத்தறி துணிகள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளிலும் பாதிப்பு உள்ளது. தற்போது இந்தியாவிற்கு இந்தோனேசியா, சீனா, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்த துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வரி விதிப்பினால் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இது சொந்த நாட்டு உற்பத்தியாளர்களை நொடிக்கும் செயலாக உள்ளது. மத்திய அரசானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நடந்து கொள்கிறது. ஆகவே, மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை பாதுகாக்கும் பொருட்டும், விசைதறியை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் பொருட்டும் விசைத்தறியில் உற்பத்தியாகும் துணிகளுக்கு 25 சதவிகிதமாக வரியை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: