திருப்பூர்,
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிஏபி திட்டத்தின் பிரதான அணைகள் மட்டுமின்றி, அமராவதி அணையும் முழுக் கொள்ளளவை எட்டி 10 டிஎம்சி நீர் வீணாக போய்விட்டது. ஆனால் மறுபுறம் திருப்பூர் மாவட்டத்தின் கணிசமான பகுதிகளில் தண்ணீர் இன்றி விவசாய நிலங்கள் காய்ந்து கிடக்கும் அவல நிலை தொடர்கிறது என்று விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெருமளவு மழை பெய்து வருவதால் அந்த அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. குறிப்பாக பரம்பிக்குளம், சோலையாறு, இடைமலையாறு, நீராறு உள்ளிட்ட அணைகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே முழுமையாக நிரம்பிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏறத்தாழ 10 டிஎம்சி அளவு நீர் விரயமாகி கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையும் நிரம்பியுள்ளது. பிஏபி மற்றும் அமராவதி பாசனப் பகுதிகளுக்கு நீர் திறந்து விடக்கூடிய நிலை இருந்தாலும், உபரி நீரை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை என்பது தொடர் கதையாக உள்ளது. கடந்த 30 ஆண்டு காலத்தில் பிஏபி பாசனப்பரப்பு படிப்படியாக விரிவாக்கப்பட்டது. எனினும் இந்த பகுதிகளுக்கு போதிய நீரைத் தர முடியாத நிலை உள்ளது. அதேசமயம் ஒரே நேரத்தில் அணைகள் முழுமையாக நிரம்பும்போது அவற்றை முறையாக தேக்கி வைத்து அனைத்து பாசனப் பகுதிகளும் முழுமையாக பயன்படும் ஏற்பாடும் இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் கூறுகையில், பிஏபி பாசனத் திட்டத்தில் கிடைக்கும் உபரி நீரை முழுமையாக விவசாயிகள் பயன்படும் வகையில் விநியோகம் செய்ய இயலாத நிலை உள்ளது. விவசாயிகள் நீண்ட காலமாக கோரி வரும் நல்லாறு அணைத்திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் இப்போது விரைவாக நீரை நிரப்பி பாசனப் பகுதிகள் பெருமளவு பயனடைந்திருக்க முடியும். ஆனால் அதை அரசு நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது. அதேபோல் அமராவதி அணை கட்டப்பட்டு 65 ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 49 ஆண்டுகள் அணை நீர் முழுக் கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அதிலும் சில ஆண்டுகளில் ஏறத்தாழ 1 லட்சம் கன அடி நீர் வரை வெளியேற்றப்பட்டு விவசாயிகளுக்கோ, குடிநீருக்கோ பயன்பட முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமராவதி அணை உபரிநீரை கிருஷ்ணாபுரம் புதுக் கால்வாய் வழியாக பொன்னாபுரம் வாய்க்கால் வெட்டினால் குண்டடம் ஒன்றியம் உப்பாறு அணைக்கு உபரிநீரை வழங்க முடியும். அங்கிருந்து வட்டமலைக்கரை அணைக்கும் தண்ணீரை அனுப்ப முடியும். வழியில் குளம், குட்டைகளுக்கும் நீர் நிரப்ப முடியும். அதன் மூலம் கடும் வறட்சியைச் சந்திக்கும் குண்டடம், மூலனூர், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 60 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பயனடைவதுடன், நிலத்தடி நீராதாரம் வளமடைந்து குடிநீர் பயன்பாட்டுக்கும் உதவும்.

ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ரூ. 12 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. எனினும் அத்திட்டம் நிறைவேறவில்லை. இப்போதும் கூட குறுகிய கால்வாய் மூலமாக உப்பாறு அணைக்கு நீர் அனுப்ப முடியும் என்று விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர். எனவே வறட்சியான பகுதிகளுக்கு உடனடியாகபலனளிக்கும் வகையில் உப்பாறு, வட்டமலைக்கரை அணை ஆகியவற்றுக்கு நீர் அனுப்பி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்று எஸ்.ஆர்.மதுசூதனன் கூறினார்.உபரி நீரை பயன்படுத்தும் திட்டங்களை முழுமையாக விரைந்து நிறைவேற்றியிருந்தால் 2 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும். ஆனால் கடலில் 10 டிஎம்சி தண்ணீர் வீணாகப் போனது. இத்திட்டங்களின் மூலம் இம்மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை அரசு நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். தற்காலிகமாக உடனடி பலனளிக்கும் வழிமுறையையும் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: