ஈரோடு,
விவசாயிகளிடம் எவ்வித ஒப்புதல் பெறாமல் விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்து முறையிட்டனர்.

இதுதொடர்பாக செலம்பவுகண்டன்பாளையம், புதுப்பாளையம் வடக்கு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வெள்ளியன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முனுசாமி, மலைவாழ் மக்கள் நல்வாழ்வு சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டம் ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை 400 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதற்கான உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்ள தமிழக மின் தொடரமைப்பு கழகம் திட்டமிட்டுள்ளது. இப்பணி முழுமையாக விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், இப்பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இழப்பீடு குறைவாக உள்ள நிலையில், எவ்விதமுன்னறிவிப்பும் இன்றி, நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். ஆகவே, யாருடைய நிலத்தில் எவ்வளவு அடிநிலம் எடுக்கின்றனர். அதற்கான இழப்பீடு எவ்வளவு வழங்கப்படும். இப்பணி செய்வதற்கான கால அவகாசம், அப்பணிக்கான இடம் தவிர மற்ற இடங்களில் விவசாயம் செய்ய தடை விதிக்கக்கூடாது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னிமலை, பெருந்துறை, மேட்டுக்கடை, கட்டியாகவுண்டனூர், செலம்பகவுண்டன்பாளையம், புதுப்பாளையம் வடக்கு,ராமலிங்கபுரம் உட்பட பல பகுதிகளில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகளை துவங்கி உள்ளனர். பணி நடக்கஉள்ள இடம் தவிர, பிற இடங்களிலும் கம்பி, இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்துவதால்,அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியவில்லை. ஆகவே, பணி துவங்கும் முன் விவசாய நிலத்திற்குரியவரிடம், உரிய ஆவணங்கள், அதற்கான ஒப்பந்த நகலைவழங்கவேண்டும். மேலும், இப்பணியை கேரளா, குஜராத் போன்றமாநிலங்களில் செய்வதுபோல, கேபிள் மூலம் கொண்டு செல்ல பரிசீலிக்க வேண்டும் என அம்மனு வில் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.