கோவை,
வியாபார முடக்கத்தால் வியாபாரி ஒருவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் காமராஜர் வீதி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (45). இவரின் மனைவி சசிகலா (36). இவர்களுக்கு சினேகா (17) மற்றும் பிரேமவர்ணா (13) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ஜானகிராமன் பனியன், ஜட்டி உள்ளிட்ட ஆடைகளை மொத்தமாக வாங்கி வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்து தவணை முறையில் பணம் வசூல் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விற்பனை மந்தமாக இருந்துள்ளது. வீடுகளில் தவணை முறையில் வழங்கிய ஆடைகளுக்கான பணமும் சரிவர சூலாகவில்லை. இதனால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் தொடர்ந்து கடன் வாங்கி குடும்பத்தை நடத்தியுள்ளார். நாளுக்கு நாள் கடன் அதிகமாகி வருவதும், வியாபாரமும் இல்லாதது ஜானகிராமனுக்கு பெரும்மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வியாழனன்று இரவு குடும்பத்துடன் பூச்சி மருந்தை குடித்துள்ளனர். வெகுநேரமாகியும் ஜானகிராமன் வீட்டில் இருந்து யாரும் வெளிவராததால் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சந்தேகத்துடன் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜானகிராமன், மனைவி சசிகலா, குழந்தைகள் சினேகா மற்றும் பிரேமவர்ணா ஆகியோர் வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக முதலில் மனைவி சசிகலாவை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சசிகலா சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மற்ற மூன்று பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்ய முயன்றது கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.