சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால் காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் இரண்டு அணைகளுக்குவரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் சனியன்று காலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் தற்போது அதிகப்படியான தண்ணீர் வருவதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணையிலிருந்து வரும் உபரி நீர் அப்படியே மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாகவும், பிரதான மதகுகள் வழியாகவும் வெளியிடப்படவுள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆர்வம்மிகுதி காரணமாக காவிரி ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம். குறிப்பாக, 8 மாவட்ட காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் படிப்படியாக அதிகரிக்கப்படுவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் ஆட்சியர் ரோஹிணி தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.