திருப்பூர்,
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு திருப்பூரில் உள்ள அனைத்து கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் வெள்ளியன்று மெளன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதல்வரும் , திமுக தலைவருமான கருணாநிதிக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருப்பூரில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் அருகில் இருந்து மாநகராட்சி வரை மெளன ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.

இதில் திமுக மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மதிமுக துரைசாமி, காங்கிரஸ்கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், அமமுக மாவட்ட செயலாளர் சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரவி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், கெளரவத்தலைவர் சக்திவேல் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள், பொதுநல அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த இரங்கல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் 13 முறை வெற்றிபெற்று, அதில் 5 முறை முதலமைச்சராக இருந்தார். மேலும், அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தார். கலைஞர் கருணாநிதி மறைவு பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் முதல்வராக இருந்த போது பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் சிறப்பாக செயல்பட்டார். அதுமட்டுமல்லாமல் சமூகநீதி, இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளில் உரிய தலையீடு செய்து சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு இடை விடா போராட்டத்தை நடத்தினர். அவரின் 50 ஆண்டுகால அரசியல் நடவடிக்கைகளை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்.மேலும், தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் குறிப்பாக பத்திரிகைகள் இதுவரை யாருக்கும் எழுதாத முறையில் கலைஞரின் இறப்பை பதிவு செய்துள்ளார்கள். இது தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்க கூடிய இழப்பாகும் என பேசினார். இந்த பேரணியில் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.