ஈரோடு,
மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் அளவில் ஈரோடு புத்தகத் திருவிழா அமைந்துள்ளதாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

14 ஆவது ஈரோடு புத்தகத் திருவிழா கடந்த சில தினங்களாக ஈரோடு வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட அரங்கங்களில் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள்,கட்டுரைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், வெளி நாட்டு அறிஞர்களின் புத்தகங்கள் உட்பட பல்வேறு தலைப்புகளில் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. இதேபோல் நாள்தோறும் மாலை நேரங்களில் அறிஞர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் பங்கேற்றும் உரை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புத்தக திருவிழாவிற்கு வாசகர்கள் மட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கிறனர். இம்மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, புத்தகத் திருவிழாவில் புத்தகங்கள் வாங்குவதற்கு என தனியாக தான் சேமித்த உண்டியல் பணத்தை கொண்டு வருபவர்களுக்கு 25 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதையடுத்து மாணவர்கள் சென்ற ஆண்டு வாங்கி சென்ற உண்டியல்களில் சேமித்த தொகையைக் கொண்டு 25 சதவிகித கழிவு தொகையின் அடிப்படையில் பல்வேறு தலைப்புகளிலான ஏராளமான புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள். இதில் காமராஜர், அப்துல்கலாம், அம்பேத்கர், நேரு போன்ற தலைவர்கள் பற்றிய புத்தகங்களை அதிகமாக விரும்பி வாங்கி வருகிறார்கள். இதனால் புத்தகத் திருவிழா மாணவர்களால் நிறைந்து காணப்படுகிறது.

 இதுகுறித்து மக்கள் சிந்தனைப்பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் கூறுகையில்,ஈரோடு புத்தகத் திருவிழாவை காண்பதற்காக ஈரோடு மட்டுமின்றி வேலூர், கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வந்து பார்த்து செல்கிறார்கள். ஒரே நாளில் 1500 பேர் நூல் ஆர்வலர் என்ற சான்றிதழை பெற்றுள்ளனர். இந்தச் சான்றிதழ் 250 ரூபாய்க்கும் மேலாக புத்தகங்கள் வாங்கினால் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் புத்தகங்களை படிக்க ஆர்வமூட்டப்படுகிறது. மாணவர்களுக்கும் 10 முதல் 30 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மேலும், நமது கொங்கு மண்டலத்தில் உள்ள சிறுஎழுத்தாளர்களின் நூல்களை நமது புத்தகத் திருவிழாவில் வெளியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரான்ஸ் இளங்கோவன், சிங்கப்பூர் கார்த்தி கலைச்செல்வன் போன்ற உலக அரங்கில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.இதனை கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் பரிசாக கொடுப்பவர்கள் மொத்த தொகையை செலுத்தி பரிசளிக்கலாம். தற்போது வரை இந்த மொத்த விலையில் வாங்க 10 பள்ளி, கல்லூரிகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: