திருப்பூர்,
திருப்பூர் நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர்முறைகேடாக வெளியேற்றப்படும் நிலையில், அதில் வெளியேறிச் செல்லும் நீர் நுரை பொங்கச் செல்வது தொடர்ந்து வருகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் நடராஜ் தியேட்டர் சாலையின் ஆற்றில் நுரை பொங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரும் சமயங்களில் சாயஆலைகள் தங்களது ஆலையில் உள்ள ரசாயன கழிவுகளை ஆற்றில் வெளியேற்றிவிடுகின்றனர். இதை மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரி கண்டும்காணாமல் உள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் கடந்த ஆண்டு நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்த போது சாய ரசாயன கழிவுகள் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக நொய்யலில் இருகரைகளையும் தொட்டு, ஆற்றை மூடும் அளவுக்கு நுரை பொங்கி பறந்தது. இதனையடுத்து சாய ஆலைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாசுகட்டுப்பாட்டு வாரியம் விதித்தும்கூட,அதனை நடைமுறைக்கு கொண்டு வராமல் உள்ளது. எனவே மீண்டும் நுரை பொங்குவது தொடர்ந்து வருகிறது. சாய கழிவுகள் கலக்காமல் தெளிவாக சென்று வந்த நொய்யலில் வெள்ளியன்று மாலை நேரத்தில் ராயபுரம் பகுதிகளில் நுரை பொங்கி பறந்து வருகிறது. இது மக்களிடையேஅதிருப்தியையும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நொய்யல் கோவை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து திருப்பூருக்கு முன்பாக மங்கலம், ஆண்டி பாளையம், பாரப்பாளையம் என பல பகுதிகளை கடந்து வந்தாலும், நகரில் ராயபுரம் பகுதிக்கு வரும்போதுதான் நுரை ஏற்படுவதாகவும்,இதற்கு மேற்குப் பகுதியில்தான் மங்கலத்திற்கு இடையே பெரும்பாலான சாய ஆலைகளும், சாய கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளது. எனவே இந்த பகுதியில் முறைகேடாக சாய கழிவுகளை வெளியேற்றும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பொது மக்கள் கூறுகின்றனர்.”நாங்கள் எல்லாம் நொய்யல் ஓரத்துல வசித்து வருகிறோம் எங்களுக்கும் குழந்தைகள் குடும்பங்கள் உள்ளது. ஆற்றில் இரவு நேரங்களில் சாயகழிவுநீர்கள் வருகிறது சில சமயம் நுறையுடன் சேர்ந்து வருவதால் பலவகையான நோய்கள் உண்டாகிறது. அந்த நுரை ஆற்றில் குறிப்பிட்ட பகுதியில் தங்கி விடுகிறது, காற்றடிக்கும் பொழுது அந்த ரசாயணம் கலந்த நுரை பறந்து எங்கள்மேலே படுவதால் தோல் நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றது, குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் போன்றநோய்களும் ஏற்படுகிறது. பலமுறை இது போன்று நுரைகளும் சாயகழிவுநீரும் வருகின்றது, அந்த செய்திகள் அனைத்து பத்திரிகைகளிலும் வருகிறது. அதை பார்த்தும் கூட மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று புலம்பினர்.

அதிகாரி அலட்சியம்; அமைச்சர் ஒப்புதல்
இது குறித்து மாசுகட்டுபாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர் செந்தில் விநாயகத்திடம் தொடர்பு கொண்டு பேசியபொழுது,எதுவாக இருந்தாலும் திங்களன்று நேரில் வந்து பாருங்கள் என்று அலட்சியமாகக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.இதைத் தொடர்ந்துசுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணனை தொடர்பு கொண்டபோது, நொய்யலில் வரக்கூடிய நுரை சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை நேரில் சென்று பார்க்கச்சொல்வதாகக்கூறினார். அத்துடன் செய்தியாளர் கேட்டதற்கு அதிகாரி அலட்சியமாக பதில் கூறியது பற்றி அமைச்சரிடம் தெரிவித்தபோது, என்ன செய்வது அதிகாரிகள் அப்படிதான் இருக்கிறார்கள் என்று அவரும் சலித்துக் கொண்டார்.

– த.அருண் கார்த்திக்

Leave a Reply

You must be logged in to post a comment.