சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் கொள்ளளவான 47.50 அடியில் 46.50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. வீராணத்திலிருந்து விவசாயப் பயன் பாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்து சிதம்பரம் பொது பணித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில்,  சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், பொதுப்பணித் துறை கொள்ளிடம் வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். கடந்த 8 மாதங்களாக வீராணம் ஏரி பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. குடிமராமத்து பணியில் பாசனத்திற்கான 60 சதவீத வாய்க்கால் கள் தூர்வாரப்படாமல் உள்ளது. ஆனால், வாய்க்கால்கள் தூர்வாரும் குடிமராமத்து பணி ரூ.11 கோடியில் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இதில், கூட்டுக் கொள்ளை நடந்துள்ளது என்று குற்றம்சாட்டிய விவசாயிகள் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுப் போம் என்றனர். தூர்வாரப்படாமல் உள்ள வாய்க்கால்களை 15 நாட்களில் போர்க்கால அடிப்படையில் தூர் வரவேண்டும். அதுவரை வீராணத்திலிருந்து தண்ணீர் திறக்கக் கூடாது என்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கருத்து கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன் கூறுகையில்,“ பொதுப்பணித் துறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை வெளிக் கொணர்ந்து பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளதால் எங்கள் சங்கத்திற்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வரவில்லை. செய்தியாளர்களுக்கும் தகவல் இல்லை. சில சங்கங்களை மட்டும் அழைத்து ரகசியமாக கூட்டம் நடத்தியுள்ளனர்” என்று குற்றம் சாட்டினார். வாய்க்கால்களை கடைமடை வரைக்கும் தூர் வாரிய பின்னர் தண்ணீர் திறந்தால்தான் விவசாயிகள் பயனடைவார்கள். குடிமராமத்து பணியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டித்தும், கொள்ளிடம் ஆற்றில் ரூ. 400 கோடியில் கதவணை கட்ட முன்னாள் முதல்வர் அறிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் ஆதனூர்- குமாரமங்கலத்தில் வரும் 14 ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.