நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் சொகுசு விடுதிகளை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக மூடும்படி வருவாய் துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடதை மீட்க கோரி யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்து இருந்தார். இந்த வழக்கில் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில் அனுமதியின்றி 39 சொகுசு விடுதிகள் யானைகள் வழித்தடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள் இருப்பதாக 12 தனியார் சொகுசுவிடுதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் 27 தனியார் சொகுசு விடுதிகள் விளக்கம் எதையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் 27 சொகுசு விடுதிகளுக்கு 48 மணிநேரத்தில் சீல் வைக்கும் படியும், 12 சொகுசு விடுதிகளின் ஆவணங்களை சரி பார்க்கும் படியும் வியாழனன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் வெள்ளியன்று காலை முதல் மசினகுடி, வாழைத்தோட்டம், சிங்காரா, பொக்காபுரம் உட்பட யானைவழித்தடத்தில் அமைந்துள்ள 27 சொகுசு விடுதிகளுக்கு வருவாய்துறை அதிகாரிகளும், மசின ஊராட்சி அதிகாரிகள் நேரில் சென்று நோட்டீஸ் வழங்கினர். சொகுசு விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆட்கள் இல்லாத விடுதிகளின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 24 மணி நேரத்தில் விடுதியின் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளாவிட்டால் சீல் வைக்கப்படும் என அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், 27 சொகுசு விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 12 சொகுசு விடுதிகள் ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி உள்ளோம். அவற்றை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். மேலும், நீதிமன்ற உத்தரவால் குடியிருப்பு பகுதிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஆட்சியர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.