மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு சங்கர் நகர் பகுதியில் சாக்கடைகழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையின் ஒரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவு நீர் செல்லும் பாதையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுகள் வெளியேற வழியின்றி அவையனைத்தும் சாலையில் மழை வெள்ளம் போல் ஓடி வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு இச்சாலையினை யாரும் கடந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சாக்கடை நீரோடு அடித்துக் கொண்டுவரும் பல்வேறு கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. கடந்த பல மாதங்களாக இப்பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போதைய நிலையால் இங்குள்ள குடியிருப்புகளில் வசிக்க இயலாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து நோய்களும் பரவி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உடனடியாக உடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடை கழிவு நீர் பாதையை சீர்செய்ய வேண்டும். சாலையோரம் கட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவு வாய்க்காலை தரைப்பகுதியில் இருந்து உயர்திக் கட்ட வேண்டும் என வலியுறுத்தி சங்கர்நகர் பகுதி மக்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று தோல்சாப் பள்ளிவாசல் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் போக்குவரத்து தடைபட்டு கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இந்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: