கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் அதிக நீர்வரத்து காரணமாக ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1.20 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், கர்நாடகாவில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரத்து 969 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என தெரிகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.